இலக்கினம்
பூமியைச் சுற்றியுள்ள வெளி 12 இராசிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. புவி தன்னைத்தானே ஒரு நாளுக்கு ஒருமுறை சுற்றுவதால், அதன் பரப்பிலுள்ள ஒவ்வொரு புள்ளியும் ஒரு நாளில் எல்லா இராசிகளையும் கடந்து செல்கின்றது. பூமிக்குச் சார்பாகப் பார்க்கும்போது இந்த இராசி மண்டலம் ஒரு நாளில் ஒரு முறை பூமியை முழுவதுமாகச் சுற்றிவருகிறது எனலாம். எனவே குறிப்பிட்ட ஒரு நேரத்தில், பூமியிலுள்ள ஒரு புள்ளிக்குச் சார்பாக, அடிவானத்தில் ஏதாவது ஒரு இராசியிலுள்ள ஒரு புள்ளி இருக்கும். சோதிடத்தின்படி, அப்புள்ளியே, அக் குறிப்பிட்ட இடத்திற்கு அந் நேரத்துக்குரிய இலக்கினம் (லக்னம்) ஆகும். இது அப்புள்ளி இருக்கும் இராசியில் அது சென்ற கோண அளவைக் குறிக்கும் பாகை, கலை, விகலை அளவுகளில் குறிப்பிடப் படுகின்றது.
மனிதர்களின் பிறந்த நேரத்துக்குக் கணிக்கப்படும் சாதகக் குறிப்பில், அப் பிறந்த நேரத்தில் அடி வானத்தில் தோன்றிய இராசியின் புள்ளி அச் சாதகத்துக்குரிய இலக்கினமாகக் குறிக்கப்பட்டிருக்கும். பொதுவாக இலக்கினம் என்னும்போது அப் புள்ளி இருக்கும் இராசியின் பெயரையே கூறுவது வழக்கமாயினும், சோதிடத்தில் அச்சொட்டான கணிப்புகள் தேவைப்படும்போது, இலக்கினத்தைக் குறிக்கும் துல்லியமான கோண அளவு பயன்படுகின்றது.