இறையனார் களவியல் உரை

இறையனார் களவியல் என்னும் நூல் தமிழரின் காதல் வாழ்க்கையைப் பற்றிக் கூறும் இலக்கண நூல். இதனை இறையனார் அகப்பொருள் என்றும் குறிப்பிடுகிறோம். தொல்காப்பியத்துக்குப் பிந்தியது. இதற்கு நக்கீரர் என்பவர் உரை எழுதியுள்ளார். இதனை இறையனார் களவியல் உரை என்கிறோம்.[1] இவரது காலம் கி.பி. 7-ம் நூற்றாண்டு. இவரது உரையில் காதல் வாழ்க்கை பற்றி விரிவான விளக்கங்கள் தரப்பட்டுள்ளன. முச்சங்க வரலாறு பற்றிய தொகுப்புக் குறிப்பினை முதன்முதலில் தந்த உரையாசிரியர் இவர். உரைநடை வளர்ச்சியில் சிலப்பதிகாரத்தில் வரும் உரைப்பாட்டு மடை என்னும் பகுதிக்குப் பின்னர் தமிழில் காணப்படும் உரைநடை இந்த உரைநூல்.

உரைநடைப் பாங்கு

‘தானே அவளே’ என்று சொல்லப்பட்டது என்னும் இவ்வுரையும் பொருந்தாது. என்னோ காரணம் எனின், கந்தருவ வழக்கத்தோடு ஒக்கும் எனவே, தமியராய்ப் புணர்தல் முடிந்தது; இன்னும் ஒருகால் அப்பொருளையே சாலப் புனருத்தமாம் என்பது.

மற்று என்னோ உரையெனின், தானே அவளே என்பது, ஆண்பால்களுள் இவனோடு ஒத்தாரும் இல்லை, மிக்காரும் இல்லை, குறைபட்டார் அல்லது; எக்காலத்தும் எவ்விடத்தும் ஞானத்தானும் குணத்தானும் உருவினானும் திருவினானும் பொருவிலன்தானே என்பது; இவளும் அன்னள் எனவே, இருவரும் பொருவிறந்தார் என்பதனைப் பயக்கும்.

நின்ற ஏகாரம், ஐந்து ஏகாரத்துள்ளும் என்ன ஏகாரமோ எனின், ஆண்குழுவின் இவனையே பிரித்து வாங்கினமையானும், பெண்குழுவின் இவளையே பிரித்து வாங்கினமையானும் பிரிநிலை ஏகாரம் எனப்பட்டது; பலவற்றுள் ஒன்று பிரிப்பது பிரிநிலை ஏகாரம் எனப்படும் ஆகலான் என்பது.

அடிக்குறிப்பு

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.