இரண்டாம் ஸ்ரீரங்கா

இரண்டாம் ஸ்ரீரங்கா (கி.பி. 1614-1614), விஜயநகரத்து அரசன் இரண்டாம் வெங்கடனால் 1614 இல் தனது வாரிசாக நியமிக்கப்பட்டான்.[1] இவனை, வெங்கடனின் நம்பிக்கைகுரிய அமைச்சனும் தளபதியுமாகிய யச்சம நாயுடு என்பவன் தலைமை தாங்கிய குழுவினர் ஆதரித்தனர். அதேவேளை கொப்புரி ஜக்க ராயன் என்பவனும் வேறு சிலரும் இவனை எதிர்த்தனர்.

விஜயநகரப் பேரரசு
சங்கம மரபு
ஹரிஹர ராயன் I 1336-1356
புக்கா ராயன் I 1356-1377
ஹரிஹர ராயன் II 1377-1404
விருபக்ஷ ராயன் 1404-1405
புக்கா ராயன் II 1405-1406
தேவ ராயன் I 1406-1422
ராமச்சந்திர ராயன் 1422
வீரவிஜய புக்கா ராயன் 1422-1424
தேவ ராயன் II 1424-1446
மல்லிகார்ஜுன ராயன் 1446-1465
விருபக்ஷ ராயன் II 1465-1485
பிரௌத ராயன் 1485
சாளுவ மரபு
சாளுவ நரசிம்ம தேவ ராயன் 1485-1491
திம்ம பூபாலன் 1491
நரசிம்ம ராயன் II 1491-1505
துளுவ மரபு
துளுவ நரச நாயக்கன் 1491-1503
வீரநரசிம்ம ராயன் 1503-1509
கிருஷ்ண தேவ ராயன் 1509-1529
அச்சுத தேவ ராயன் 1529-1542
சதாசிவ ராயன் 1542-1570
அரவிடு மரபு
அலிய ராம ராயன் 1542-1565
திருமலை தேவ ராயன் 1565-1572
ஸ்ரீரங்கா I 1572-1586
வெங்கடா II 1586-1614
ஸ்ரீரங்கா II 1614-1614
ராமதேவா 1617-1632
வெங்கடா III 1632-1642
ஸ்ரீரங்கா III 1642-1646

முன்னைய அரசன் இரண்டாம் வெங்கடனின் மகன் என்று கருதப்பட்ட ஒருவன் இருந்தது நிலைமையை இன்னும் சிக்கலாக்கியது. ஜக்க ராயனும் அவனது ஆதரவாளர் இருவரும், இரண்டாம் ஸ்ரீரங்காவையும், அவனது குடும்பத்தினரையும் பிடித்து வேலூர் கோட்டையில் சிறை வைத்துவிட்டு, முன்னைய அரசனின் மகன் என்று சொல்லப்பட்டவனை அரசனாக்கினர்.

இதனை எதிர்த்த யச்சம நாயுடு, ஒரு சலவைத் தொழிலாளியின் உதவியுடன், ஸ்ரீரங்காவின் 12 வயதேயான இரண்டாவது மகனான ராம தேவனைச் சிறையிலிருந்து வெளியே கடத்திவந்தான். எனினும், ஸ்ரீரங்காவையும் அவனது குடும்பத்தினரையும் ஒரு நிலக்கீழ்ச் சுரங்கப் பாதை வழியாகக் கடத்திவர யச்சம நாயுடு எடுத்த முயற்சி கண்டுபிடிக்கப்பட்டு, ஸ்ரீரங்காவுக்கான காவல் மேலும் பலப்படுத்தப்பட்டது.

இறுதியாக, வேலூர்க் கோட்டையின் காவலாளிகளைக் கொன்று ஸ்ரீரங்கனையும் குடும்பத்தினரையும் தப்புவிக்க எடுத்த முயற்சியும் தோல்வி அடையவே, இரண்டாம் ஸ்ரீரங்காவும் அவனது குடும்பத்தினரும் ஜக்க ராயனால் கொல்லப்பட்டனர். அரச குடும்பத்தினர் கொலை செய்யப்பட்டது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி ஜக்க ராயனின் குழுவினருக்கு எதிராக வெறுப்பை ஏற்படுத்தியது. இதனால் ஜக்க ராயனை ஆதரித்த பலர் அவனை விட்டு விலகி யச்சம நாயுடுவின் குழுவைச் சார்ந்தனர்.

அரியணை ஏறியதன் பின் நான்கு மாதங்கள் மட்டுமே இரண்டாம் ஸ்ரீரங்கா உயிருடன் இருந்தான். இதன் பின்னர் இவ்விரு பிரிவினரிடையே 1617 ஆம் ஆண்டில் ஏற்பட்ட தோப்பூர்ப் போர் என அழைக்கப்பட்ட பெரிய வாரிசுச் சண்டை ஒன்றின் பின்னர் ஸ்ரீரங்காவின் சிறியிலிருந்து தப்பிய மகனான ராம தேவன் அரசனாக்கப் பட்டான்.

மேற்கோள்கள்

  1. Vijayanagara and Bamini Kingdom - Chapter 9 - Page 2.42
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.