இயேசு கற்பித்த இறைவேண்டல் கோவில்

இயேசு கற்பித்த இறைவேண்டல் கோவில் (Church of the Pater Noster) எருசலேம் நகரில், ஒலிவ மலையில் "இறைவாக்கினர் கல்லறைகள்" என்னும் பகுதிக்கு வடக்கே அமைந்துள்ள உரோமன் கத்தோலிக்க கோவில் ஆகும். இக்கோவில் "எலெஓனா தூயகம்" (Sanctuary of the Eleona; French: Domaine de L'Eleona) என்னும் பெயராலும் அழைக்கப்படுகிறது. Eleona என்னும் சொல் "ஒலிவ மலை" என்னும் பொருள்படும் வகையில் கி.பி. 4ஆம் நூற்றாண்டு திருநாட்டுக்குத் திருப்பயணமாகச் சென்ற எஜேரியா (மாற்றுவடிவம்: எத்தேரியா) என்னும் பெண்மணியால் முதன்முறையாகப் பயன்படுத்தப்பட்டது.

இயேசு கற்பித்த இறைவேண்டல் கோவில்
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம் எருசலேம், இசுரயேல்
புவியியல் ஆள்கூறுகள்31°46′41.08″N 35°14′42.69″E
சமயம்உரோமன் கத்தோலிக்கம்
மாவட்டம்அட்-தூர், எருசலேம்
நிலைபயன்பாட்டில் உள்ளது

இயேசு இறைவேண்டல் கற்பித்த இடம்

கிறித்தவ மரபுப்படி, இக்கோவில் கட்டி எழுப்பப்பட்ட இடத்தில் இயேசு தம் சீடர்கள் எவ்வாறு இறைவேண்டல் செய்ய வேண்டும் என்று கற்பித்தார். அந்த வரலாற்றை புனித லூக்கா தம் நற்செய்தியில் கீழ்வருமாறு குறிப்பிடுகிறார்:

இயேசு ஓரிடத்தில் இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தார். அது முடிந்ததும் அவருடைய சீடர்களுள் ஒருவர் அவரை நோக்கி, 'ஆண்டவரே, யோவான் தம் சீடருக்கு இறைவனிடம் வேண்டக் கற்றுக் கொடுத்ததுபோல் எங்களுக்கும் கற்றுக்கொடும்' என்றார். அவர் அவர்களிடம், 'நீங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது இவ்வாறு சொல்லுங்கள்:

தந்தையே, உமது பெயர் தூயதெனப் போற்றப்பெறுக!
உமது ஆட்சி வருக!
எங்கள் அன்றாட உணவை நாள்தோறும் எங்களுக்குத் தாரும்.
எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோர் அனைவரையும் நாங்கள் மன்னிப்பதால்
எங்கள் பாவங்களையும் மன்னியும்.
எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும்.
[தீயோனிடமிருந்து எங்களை விடுவித்தருளும்']
என்று கற்பித்தார்

வரலாறு

4 ஆம் நூற்றாண்டில் உரோமைப் பேரரசராக இருந்த முதலாம் கான்ஸ்டன்டைன் மன்னன், இயேசு கிறித்து விண்ணகம் ஏறிச்சென்ற நிகழ்வைச் சிறப்பிக்கும் வகையில் ஒரு கோவிலை எருசலேமில் கட்ட ஏற்பாடு செய்தார். அக்கோவில் இருந்த இடத்தில் இன்றைய கோவில் எழுப்பப்பட்டது.

4 ஆம் நூற்றாண்டுக் கோவில் முதலாம் கான்ஸ்டன்டைன் மன்னனின் அன்னையாகிய புனித எலேனா என்பவரின் மேற்பார்வையில் கட்டப்பட்டது.[1] அக்கோவிலுக்கு அவர் கொடுத்த பெயர் "சீடர்களின் கோவில்" என்பதாகும். 4 ஆம் நூற்றாண்டில் அக்கோவிலைச் சந்தித்ததாக எஜேரியா என்னும் திருப்பயணி குறிப்பிட்டுள்ளார்.

அதற்கு முன்னரே, "யோவான் பணிகள்" என்னும் 2 ஆம் நூற்றாண்டு நூற்றாண்டு நூலில், இயேசு தம் சீடர்களுக்குப் போதனை வழங்கிய இடமாக "ஒலிவமலைக் குகை" குறிப்பிடப்பட்டுள்ளது.

4 ஆம் நூற்றாண்டில் எழுப்பப்பட்ட கோவில் ஏறக்குறைய முன்னூறு ஆண்டுகள் நல்ல நிலையில் இருந்தது. ஆனால் அக்கோவிலை 614 இல் பாரசீகர்கள் அழித்தார்கள். பின்னர், 1116 ஆம் ஆண்டில் கோவிலை சிலுவைப்போர் வீரர்கள் மீண்டும் கட்டி எழுப்பினார்கள். அதிலிருந்து அக்கோவில் "இயேசு கற்பித்த இறைவேண்டல்" வழங்கப்பட்ட இடமாகக் கருதப்பட்டுவந்துள்ளது.

இன்றைய கோவில்

சிலுவைப்போர் வீரர்கள் கட்டிய கோவில் 1187 இல் நடந்த எருசலேம் முற்றுகையின்போது பெரும்பாலும் அழிந்தது. பின்னர் பல ஆண்டுகள் அக்கோவில் பாழடைந்து கிடந்தது. 4 ஆம் நூற்றாண்டுக் கோவிலின் கற்கள் பலவும் கல்லறைக் கற்களாக விற்கப்பட்டன. 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில், போசி அவுரேலியா என்னும் இளவரசியின் ஆதரவோடு பண்டைய 4 ஆம் நூற்றாண்டுக் கோவிலின் அடித்தளத்தைக் காணும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

அவர் "இயேசு கற்பித்த இறைவேண்டல் கோவில்" தொடக்கத்தில் அமைந்திருந்த இடத்தில் ஒரு தோட்டத்தை 1868 இல் உருவாக்கினார். பின் 1872 இல் கர்மேல் துறவியர் இல்லத்தை எழுப்பினார். 1910 இல் பண்டைய கோவிலின் அடித்தளத்தின் ஒரு பகுதி கண்டுபிடிக்கப்பட்டது. எனவே துறவியர் இல்லம் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டது.

4 ஆம் நூற்றாண்டுக் கோவில் இருந்த இடத்தில் பிசான்சியக் கலைப்படி அமைந்த இன்றைய கோவிலைக் கட்டும் வேலை 1915இல் தொடங்கியது. அக்கோவில் கட்டடம் இன்னும் முழுமை பெறவில்லை.

இடம்

இக்கோவில் எருசலேமிலுள்ள அட்-தூர் எனும் வட்டாரத்தில் அமைந்துள்ளது. ஏறக்குறைய 18,000 பேரை சனத்தொகையாகக் கொண்ட இம்மாவட்டத்தில் இசுலாமியர் பெரும்பான்மையாகவும் கிறிஸ்தவர்கள் சிறுபான்மையாகவும் காணப்படுகின்றனர்.

உலக மொழிகளில் இயேசுவின் இறைவேண்டல்

இக்கோவிலோடு இணைந்துள்ள தோட்டப் பகுதியில் இயேசு கற்பித்த இறைவேண்டல் தமிழ் உட்பட ஏறக்குறைய 100 மொழிகளில்[2] பெயர்க்கப்பட்டு கற்பதிகைகளாகச் சுவரில் பதிக்கப்பட்டுள்ளன.

படங்கள்

குறிப்புகள்

வெளி இணைப்புக்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.