இந்தியாவில் வதையா இறப்பு
இந்தியாவில் வதையா இறப்புத் தொடர்பான சட்ட, சமூக அணுகுமுறை அண்மைக் காலமாக மாறிவரும் ஒன்றாகும். சிலர் வதையா இறப்புப் பெற வேண்டும் என்ற குரல்கள் அவ்வப்போது எழுவதால் இந்தியாவில் இது பெரிதும் சர்ச்சைக்குரிய ஒன்றாகவே விளங்கி வருகிறது.
சட்டம்
இந்தியாவில் வதையா இறப்பு சட்டத்துக்கும் புறம்ப்பான ஒன்றாகவே நெடுங்காலம் இருந்துவந்துள்ளது. சட்டப்படி இது கொலை (homocide) ஆகும். ஆனால் ஆனால் 7 மார்ச் 2011 இது தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பு முனைப்பற்ற வதையா இறப்பை (passive euthanasia) சட்ட ஏற்புச் செய்தது. இத்தகைய நடைமுறையைக் கையாளுவதற்கு முன் மருத்துவர்கள் விண்ணப்பிக்க வேண்டும் என்றும், அத்தகைய நடவடிக்கை உயர் நீதிமன்றத்தின் மேற்பார்வையில் நடைபெற வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் ஒரு விதியையும் விதித்துள்ளது.[1] நாடாளுமன்றத்தில் இத்தகைய சட்டம் இயற்றப்படும்வரை இதுவே வழிகாட்டலாக இருக்கும்.
37 ஆண்டுகளாக செயலிழந்த நிலையில் இருந்து வரும் அருணா சான்பாக்கை கருணைக் கொலை செய்ய அனுமதிக்க வேண்டுமென எழுத்தாளர் பிங்கு விரானி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மார்கண்டேய கட்ஜு, கியான்சுதா மிஸ்ரா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்னிலையில் மார்ச் 7, 2011ல் விசாரணைக்கு வந்தது. அருணா தங்கவைக்கப்பட்டுள்ள மருத்துவமனையின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், கடந்த 37 ஆண்டுகளாக மருத்துவமனையில் உள்ள அருணாவை அங்குள்ள செவியர்களும், மருத்துவர்களும் அர்பணிப்பு உணர்வுடன் கவனித்து வருவதாக வாதிட்டார். அருணா சான்பாக் வழக்கில் 07-03-2011 அன்று தீர்ப்பளித்த இந்திய உச்சநீதிமன்றம், "கருணைக்கொலை எதிர்நோக்கியிருப்பவருக்கு தேவையான உயிர் ஆதாரங்கள் (life support), உணவு, நீர் நிறுத்தப்பட்டிருந்தாலே இம்முடிவை எடுக்க முடியும். உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் படி மருத்துவர்களே முடிவு செய்வர்" என்று அறிவித்தது.[2] மேலும் அருணா வழக்கைப் பொறுத்தவரை அதன் உண்மைகளும், சூழல்களும், மருத்துவ ஆதாரங்களும் அவரை கருணைக்கொலை செய்யத் தேவையில்லை என்பதை எடுத்துக் காட்டுகின்றன என்று கூறி மனுவைத் தள்ளுபடி செய்தது.[3] மிகவும் தவிர்க்க முடியாத, சில விதிவிலக்கான சூழ்நிலைகளில் மட்டுமே ஒருவர் கருணைக் கொலை செய்யப்படலாம் என்று கூறியுள்ளனர். இத்தீர்ப்பானது இந்தியாவில் கருணைக்கொலை குறித்த புதிய பார்வைக்கு வழிகோலியுள்ளது.