இந்தியால் தமிழ் எவ்வாறு கெடும்
இந்தியால் தமிழ் எவ்வாறு கெடும் எனும் நூல் காட்டுப்பாடி விரிவில் பாவாணர் இருந்த நாளில், 1968 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டதாகும். முகவுரை நிறைவில்,
"இமிழ்கடல் உலக மெல்லாம் எதிரிலா தாள்வ தேனும் அமிழ்தினு மினிய பாவின் அருமறை பலவும் சான்ற தமிழினை இழந்து பெற்றால் தமிழனுக் கென்கொல் நன்றாம் குமிழியை ஒத்த வாழ்வே குலவிய மாநி லத்தே''
என்று பாடுதல் தமிழை இழந்து பெறும் பேறு எதுவாயினும் பேறாகாது என்னும் அவருட்கிடை காட்டும். தம்மை அடிமைப் படுத்துவாரினும் மிகுதீயர் தம்மொழி அடிமைக்கு ஒப்பி நிற்பார் என்பது வரலாற்று உண்மை.
நூற்சுருக்கம்
முற்படை, இந்தி வரலாறு, இந்தியால் விளையும் கேடு, இந்திப் போராட்டம், பல்வேறு செய்திகள், முடிபு என்னும் ஆறு பகுதிகளும், முப்பின்னிணைப்புகளும் கொண்ட இச்சுவடி, 90 பக்க அளவில் உருபா 1 விலையில் புன்செய்ப் புளியம்பட்டி மறைமறையடிகள் மன்றப் பாவாணர் நூல் வெளியீட்டுக் குழு உதவியால் வெளியாயிற்று.
தமிழ் கெடும் வகைகள்
- கவனக்குறைவு
- புலமைக்குறைவு
- கலப்பட மிகை
- சொன்மறைவு
- சொற்சிதைவு
- ஒலிமாற்றம்
- அயற்சொற்சேர்ப்பு
- இந்தி மூலப்புணர்ப்பு
- மதிப்புக் குறைவு
- பற்றுக் குறைவு
- பேச்சுக்குறைவு
- எழுத்துமொழி வரலாற்றழிவு போன்ற வகைகளால், தமிழ் கெடும் வகையை விளக்குகிறார்.
தமிழன் கெடும் வகைகள்
- தமிழ் மாணவர்க்கு வீண் கடுஞ்சுமை
- தமிழர் குடிமைத் தாழ்வு
- தமிழர் பண்பாட்டுக் கேடு
- தமிழ்ச் சான்றோர்க்கு வாழ்வின்மை
- தமிழின மறைவு போன்ற வகைகளால் தமிழன் கெடும் வகையை விளக்குகிறார்.
சிறப்புகள்
''பெற்றவருக்குத்தான் தெரியும் பிள்ளையின் அருமை; கற்றவருக்குத்தான் தெரியும் தமிழின் அருமை; பற்றும் புலமையும் அற்றமற்றவருக்குத் தெரியுமா நற்றமிழ்ப் பெருமை'' (பக்கம்-43)
- இந்தியப் பொதுமொழியாதற்கு, இந்திக்குத் தகுதியின்மையை இருபது காரணங்கள் காட்டி நிறுவுகிறார்.(பக்கம்51-53)
- இந்தியின் மொழிகளும் கிளைமொழிகளும் 1951 குடிமதிப்பின்(census) படி 81பிரிவு ஆதலைப் பட்டியலிட்டுக் காட்டுகிறார்.
- இந்தியா இந்தியர் எல்லார்க்கும் பொதுவாம். இந்தியார்க்கு மட்டுமே உரியதன்று என்னும் பாவாணர், உலகப் பொதுவரசே ஒற்றுமைக்கு வழி என முடிக்கிறார்.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.