இந்தியத் திரைப்படத்துறை

இந்தியாவின் மிக முக்கியமான ஊடகங்களில் திரைப்படங்கள் முக்கிய இடம் வகிக்கின்றன.

நுழைவுச் சீட்டுக்களின் விற்பனை, மற்றும் ஆண்டு தோறும் தயாரிக்கப்படும் திரைப்படங்களின் எண்ணிக்கை என்பவற்றின் அடிப்படையில், இந்தியத் திரைப்படத்துறை உலகிலேயே மிகப்பெரியது ஆகும். உலகிலேயே குறைந்த விலையில் நுழைவுச் சீட்டுக்கள் கிடைப்பது இந்தியாவிலேயே என்று கூறப்படுகின்றது. ஆசியா-பசிபிக் பகுதியின் 73% திரைப்படம் பார்ப்பவர்கள் இந்தியாவிலேயே உள்ளனர் என்பதுடன் ஆண்டுக்கு 2.9 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு வருமானம் கிடைப்பதாகவும் சொல்லப்படுகின்றது. இந்தியத் திரைப்படத் துறையின் வளர்ச்சி, பெருமளவிலான படம் பார்க்கும் இந்திய மக்களிலேயே தங்கியுள்ளது. இந்திய மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியம் (Central Board of Film Certification of India) இணையத்தளத்தில் குறிப்பிட்டுள்ளபடி ஒவ்வொரு மூன்று மாதமும் இந்தியாவின் மக்கள் தொகைக்குச் சமமான அளவினர் திரைப்பட அரங்குகளுக்குச் செல்கின்றனர். இந்தியாவில் மட்டுமன்றி, இந்திய மக்கள் பெருமளவில் வாழும் பல்வேறு நாடுகளிலும் இந்தியத் திரைப்படங்கள் காண்பிக்கப்படுகின்றன.

இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், போஜ்புரி, வங்காள மொழி ஆகிய மொழிகளில் பெரும் திரைப்படத்துறைகள் செயல்படுகின்றன. இந்தியத்திரைப்படத்துறை உலகிலேயே அதிகளவில் திரைப்படங்கள் வெளியிடும் திரைத்துறைகளில் முதல் இடத்தில் உள்ளது. 2003ல் மட்டும் 877 திரைப்படங்களும் 1177 விவரணைப்படங்களும் இந்தியாவில் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தகுந்தது. மேலும் 2005 ஆம் ஆண்டின் கணிப்பின்படி இந்தியாவில் திரைப்பட அனுமதிச்சீட்டுக்களின் கட்டணம் மிகவும் குறைந்ததாகக் காணப்படுகின்றது அதாவது ஒரு அனுமதிச் சீட்டின் விலை 0.20 அமெரிக்க டாலர்களும்.அமெரிக்காவில் அனுமதிச்சீட்டின் விலை 6.41 டாலர்களாகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது. 2005 ஆம் ஆண்டிற்கான மொத்த வருவாய் 2.9 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும்.மேலும் இந்தியாவில் அமைந்திருக்கும் ராமோஜி திரைப்பட நகரமே உலகின் மிகப் பெரிய திரைப்பட நகரம்.

இந்தியாவில் திரைப்படத்தின் அறிமுகம்

1896-1910

திரைப்படம் இந்தியாவில் 1896 ஆம் ஆண்டு ஜூலை 7 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. லுமியர் பிரதர்ஸ் சினிமட்டோகிரபி (Lumiere Brothers' Cinematography) என்னும் நிறுவனம் பம்பாயில் இருந்த வாட்சன் விடுதியில் ஆறு சிறிய ஊமைப் படங்களைத் திரையிட்டது. டைம்ஸ் ஆஃப் இண்டியா இது பற்றிய விரிவான தகவல்களை வெளியிட்டது. அதே ஆண்டில் மதராஸ் நிழற்பட நிலையம் (Madras Photographic Store) அசையும் நிழற்படங்கள் பற்றி விளம்பரப்படுத்தியது. 1897 ஆம் ஆண்டளவில் பம்பாயில் கிளிஃப்டன் அண்ட் கோ நிறுவனம் தனது மீடோஸ் தெரு நிழற்படக் கலையகத்தில் (Meadows Street Photography Studio) அன்றாடம் திரைப்படங்களைத் திரையிடத் தொடங்கியது.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.