ஆல்பிரெட் டிக்கன்
ஆல்பிரட் டிக்கன் (Alfred Deakin 3, ஆகசுடு 1856 - 7 அக்டோபர் 1919) என்பவர் ஆத்திரேலிய அரசியல்வாதி மற்றும் இரண்டாவது ஆத்திரேலியப் பிரதமர் ஆவார். 1903-1904, 1905-1908, 1909-1910 ஆண்டுகளில் மூன்று முறை பிரதமர் பதவியில் இருந்தவர். தொடக்கத்தில் ஆத்திரேலியக் கூட்டமைப்பு உருவாக ஓர் இயக்கத்தில் தலைவராக இருந்தவர்.[1]

வாழ்க்கைக் குறிப்புகள்
ஆல்பிரட் டிக்கன் ஓர் எளிய பாட்டாளிக் குடும்பத்தில் பிறந்தார். பள்ளிப் படிப்புக்குப் பிறகு சட்டம் பயின்று பட்டம் பெற்றார். வழக்குரைஞர்கள் மன்றத்தில் இணைந்தார். ஒரு செய்தித் தாள் நிறுவனத்தில் சேர்ந்து தனது எழுத்து ஆற்றலால் அங்கு நல்ல பெயர் பெற்றார். பின்னர் அரசியல் ஆர்வம் ஏற்பட்டு தேர்தலில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார்.[2]
புரொடெக்சனிஸ்ட் கட்சி, சோசலிச எதிர்ப்புக் கட்சி ஆகிய இரண்டையும் இணைத்து காமன்வெல்த் லிபரல் கட்சியை உருவாக்கினார். ஆனால் இந்தக் கட்சி 1910 தேர்தலில் தோல்வி அடைந்தது. பிசர் லேபர் கட்சி வெற்றி பெற்றது. 1913 தேர்தலுக்கு முன்னதாக டிக்கன் நாடாளுமன்றத்திலிருந்து விலகினார்.
பணிகள்
உழைக்கும் தொழிலாளர்கள் நன்மைக்காகத் தொழிலாளர் சீர்திருத்தங்கள் கொண்டு வரச் செய்தார். ஆத்திரேலியாவில் நீர்ப்பாசன வளர்ச்சிக்கு இவர் பங்காற்றினார். ஆத்திரேலியா குடியேற்ற நாடாக இருந்து தனி நாடாக அமைய தனி அரசியல் அமைப்புச்சட்டம் உருவாகவும், அது ஐக்கிய இராச்சியத்தால் ஏற்றுக் கொள்ளவும் பாடுபட்டார். ஆல்பிரட் டிக்கன் பிரதமராக இருந்தபோது உயர் நீதிமன்றத்தை விரிவுப் படுத்தினார். கப்பல்கள் வாங்குவதற்கு நிதி ஒதுக்கியதால் ராயல் ஆத்திரேலியா கடற்படை வலிவுடையதாக ஆனது.
நினைவு கூர்தல்
இவருடைய எழுத்து ஆக்கங்கள் இரண்டு நூல்களில் அச்சாகி இவரது மறைவுக்குப் பின்னர் வெளிவந்தது. தி கிரைசிஸ் இன் விக்டோரியன் பாலிடிக்ஸ் மற்றும் தி பெடரல் ஸ்டோரி என்பவை அந்த நூல்கள் ஆகும். 1969 ஆம் ஆண்டில் ஆத்திரேலிய அஞ்சல் துறை ஆல்பிரட் டிக்கனின் நினைவைப் போற்றும் வகையில் அவரது உருவ அஞ்சல் தலையை வெளியிட்டது.
மேற்கோள்
- "Senators and Members". Parliament of Australia.
- https://www.thefamouspeople.com/profiles/alfred-deakin-6155.php