ஆரம்ப சுகாதார நிலையம்

ஆரம்ப சுகாதாரா நிலையம் (Primary Health Centre)(PHC) வளரும் நாடுகளில் பொது சுகாதாரச் சேவைகளை வழங்கிடும் அடிப்படை மருத்துவ நிலையமாகும். முக்கியமாக கிராமப்புறங்களில் அனைவருக்கும் எந்நேரமும் எளிதாக சென்று இலவச அல்லது வாங்கக்கூடிய ஆரம்பநிலை மருத்துவ வசதிகளை அமைத்துத் தருவதே இந்நிலையங்களின் நோக்கமாகும். இது உலக சுகாதார அமைப்பின் 1978ஆம் ஆண்டில் கசக்ஸ்தானில் நிறைவேற்றிய அல்மா அடா அறிக்கையின்படி செயல்படுத்தப்படுவதாகும்.

தென் ஆசியாவில் இந்நிலையங்கள் 30,000 பேருக்கு ஒன்று என்ற நிலையில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையத்தின் கீழும் ஐந்தாறு துணை மையங்கள் செவிலியருடன் அமைந்துள்ளன.இவர்கள் மூலம் அரசின் நோய்தடுப்புத் திட்டங்கள், ஆரம்ப சிகிட்சைகள்,மகப்பேறு, தாய்-சேய் நலம் ஆகியன செயல்படுத்தப்படுகின்றன. ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையத்திலும் ஓரிரு மருத்துவர்கள்,ஓர் மருந்தியலாளர்,செவிலியர்கள் மற்றும் பிற சுகாதார ஊழியர்கள் இருக்கின்றனர். இது உலக சுகாதார நிலையத்தின் GOBI-FFF என்று சுருக்கப்படும் சேவைகளுக்கான மையமாகவும் செயல்படுகின்றன.

இந்தியாவில் சுகாதார நலன் பேணுதலில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் அடிப்படை கட்டுமானமாக உள்ளன. இந்நிலையத்தின் மருத்துவ அதிகாரி எம்.பி.பி.எஸ் பட்டம் பெற்றவராக இருத்தல் வேண்டும். அவர் நோயறிதல் மற்றும் சிகிட்சைப் பணிகளைத் தவிர நிலையத்தின் நிர்வாகப் பணியையும் மேற்கொள்கிறார்.நிலைய ஊழியர், நிர்வகிக்கப்படும் மாநிலத்தைப் பொறுத்து, ஆஷா (Accredited Social Health Activist) அல்லது கிராம சுகாதார செவிலியர் என அழைக்கப்படுகிறார்.கிராம சுகாதார செவிலியர் நோயாளின் இடத்திற்குச் சென்று சேவை வழங்குகிறார். நோயாளிக்கு மேலதிக மருத்துவ சோதனைகளோ சிகிட்சையோ தேவைப்படின், ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு மருத்துவரால் பரிசோதிக்கப்படுகிறார்.தேவைப்பட்டால் மாவட்ட பொது மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்படுகிறார். தற்போது தேசிய சுகாதார திட்டத்தின்படி இந்நிலையங்களில் உள்ள மருத்துவ வசதிகள் மேம்படுத்தப்படுகின்றன.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.