ஆம்பல் (எண்)

ஆம்பல் (எண்) என்பது அளவு காட்டாமல் மிகுதியைக் குறிப்பிடும் எண்ணுப்பெயர்களுள் ஒன்றாகும். இதனை அல்பெயர் எண் எனத் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது.[1] பதினைந்து இலக்கம் கொண்ட பேரெண் சங்கத்தமிழர்களால் ஆம்பல் என அழைக்கப்பட்டது. அதாவது நூறு திரிலியனை ஆம்பல் என அழைத்தனர்.[2] (ஆம்பல் = 100,000,000,000,000 = 1014 = நூறு திரில்லியன்)

சேரலாதன் ஈழத்தின் மாந்தை நகரில் இருந்த அவனது அரண்மனை முற்றத்தில் ஆம்பல் மதிப்பிலான (நூறு திரிலியன்) பொருளை நிலம் தின்னக்(அழிந்து போகுமாறு) கைவிட்டான் என்பதை மாமூலனார் என்ற புலவர் அகநானூற்றில் குறிப்பிடுகிறார்.

வலம்படு முரசின் சேரலாதன்

முந்நீர் ஓட்டிக் கடம்பு அறுத்து இமயத்து முன்னோர் மருள வணங்கு விற்பொறித்து நன்னகர் மாந்தை முற்றத்து ஒன்னார் பணிதிறை தந்த பாடுசால் நன்கலம் பொன் செய் பாவை வயிரமொடு ஆம்பல் ஒன்று வாய் நிறையக் குவைஇ அன்றவன் நிலம் தின்னத் துறந்த நிதியத்து அன்ன” [3]

பதிற்றுப்பத்து என்ற இலக்கியம் செல்வக்கடுங்கோ வாழியாதன் என்ற மன்னனைக் கபிலர் வாழ்த்துவதாக

" நும்நுகம் கொண்டினும் வென்றோய் அதனால்

செல்வக் கோவே சேரலர் மருக கால்திரை எடுத்த முழங்குகுரல் வேலி நனம்தலை உலகஞ் செய்தநன்(று) உண்(டு)எனின் அடைஅடுப்(பு) அறியா அருவி ஆம்பல் ஆயிர வெள்ள ஊழி வாழி யாத வாழிய பலவே.[4]

" இலைகளால் சூழப்படாத பூக்கள் அல்லாத பல ஆம்பல் என்னும் பேரெண்ணும, அதனை ஆயிரத்தால் பெருக்கிய வெள்ளம் என்னும் பேரெண்ணும் சேர்ந்த எண்ணிக்கை கொண்ட பல ஊழிக்காலம் நீ வாழ்வாயாக!"எனக் குறிப்பிடுகிறது.[5]

மேற்கோள்களும் குறிப்புகளும்

  1. தொல்காப்பியம், பொருளதிகாரம், 19
  2. தமிழரசி (25, மே 2012). "ஆம்பல்". பார்த்த நாள் நவம்பர் 14, 2012.
  3. அகநானூறு: 127: 3-10
  4. பதிற்றுப்பத்து பாடல், ஏழாம்பத்து, பாடல் 63
  5. "அருவி ஆம்பல்". பார்த்த நாள் நவம்பர் 14, 2012.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.