ஆமூர்

ஆமூர் என்னும் பெயருடன் சங்ககாலத்தில் மூன்று ஊர்கள் இருந்தன. 'ஆம்' என்னும் சொல்லுக்கு 'ஊற்றுநீர்' என்னும் பொருள் உண்டு.[1] எனவே ஊற்றுநீர் வளம் மிமுதியாக உள்ள ஊர் ஆமூர் எனப்பட்டது.

(1) இக்கால உளுந்தூர்ப்பேட்டைச் சட்டமன்றத் தொகுதியில் ஆமூர் என்னும் ஊர் உள்ளது. இது சங்ககால ஆமூர் அன்று. செய்யூர் தொகுதிழில் உள்ள சித்தாமூர் என்னும் ஊரே சங்ககால ஆமூர். சங்ககாலத்தில் இது ஓய்மானாட்டு ஆமூர் எனப் போற்றப்பட்டது. ஓய்மானாட்டு நல்லியக்கோடன் நாட்டு ஊர். இவ்வூரில் உழவர்களோடு ஒன்றுகலந்து அந்தணர்கள் வாழ்ந்தனர். அங்கு சென்றால் உழவர் தங்கை பின்தொங்கும் சடையுடன் தோன்றி வளைக்கையால் தடுத்து கைக்குத்தல் அரிசியிட்டுப் பொங்கிய சோறும் நண்டுக் குழம்பும் விருந்தாகத் தருவாளாம்.[2]

(2) திருச்சி மாவட்டம் கொள்ளிடம் ஆற்றின் வடகரையில் ஒரு ஆமூர் உள்ளது. இது முக்காவனாட்டு ஆமூர் எனப் போற்றப்பட்டது. சங்ககாலத்தில் இவ்வூர் மல்லன் சோழ அரசன் போர்வைக் கோப்பெருநற்கிள்ளியோடு மற்போர் புரிந்து தோற்றுப்போனான்.[3][4]

(3) பொருள் தேடச் சென்ற தமிழர் சேரநாட்டு ஆமூர் சென்று பாதுகாப்பாகத் தங்கினர். இதனை வானவன் என்னும் சேரன் வென்று கொடுமுடி என்பவனிடம் தந்து காத்துவரும்படி செய்திருந்தான். குறும்பொறை என்பதைக் கல்ராயன் மலை எனக் கொண்டு அதன் கிழக்கில் உள்ள ஆமூர் எனக் கொள்ளவும் இடம் உண்டு. இது இக்காலத்தில் வேலூர் மாவட்டத்தில் உள்ளது.[5]

சான்று

  1. வேய்பயில் இரும்பில் ஆம் அறல் பருகும் - நற்றிணை 213
  2. மருதம் சான்ற மருதத் தண்பணை அந்தணர் அருகா அருங்கடி வியனகர் அந்தண் கிடக்கை அவன் ஆமூர் – சிறுபாணாற்றுப்படை – 188
  3. வெல்போர்ச் சோழர் ஆமூர் அன்ன இவள் நலம் –ஐங்குறுநூறு 56
  4. போர்வைக் கோப்பெருநற்கிள்ளி முக்காவனாட்டு அமூர் மல்லனைப் பொருது அட்டு நின்றானைச் சாத்தந்தையார் பாடினார் – புறம் 80, 81, 82
  5. குறும்பொறைக் குணாஅது – வெல்போர் வானவன் – யானை மருப்பு ஒடிய நூறிக் கொடுமுடி காக்கும் குரூஉக்கண் நெடுமதில் சேண் விளங்கு சிறப்பின் ஆமூர் எய்தினும் – ஆண்டு அமைந்து உறையுநர் அல்லர் - ஆவூர்க் காவிதிகள் சாதேவனார் அகம் 159

தொண்டை நாட்டில் ஆமூர் இருக்கிறது. இங்கு ஊற்று நீர் வளம் மிகுதியாகவே உள்ளது

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.