ஆன்மார்த்தக் கிரியை

ஆன்மார்த்தக் கிரியை என்பது சிவாகமங்களில் சொல்லப்பட்ட விதிமுறைகளுக்கேற்ப நடைபெறும் சைவ வழிபாடுகளின் பிரதான இரு பிரிவுகளில் ஒன்று. தன் நன்மை கருதிச் செய்யப்படும் சந்தியாவந்தனம், சிவபூசை போன்ற வழிபாடுகளைக் குறிக்கும்.

ஆன்மார்த்த வழிபாடுகளின் பிரிவுகள்

ஆன்மார்த்த வழிபாடானது பூர்வக் கிரியை, அபரக் கிரியை என இரு வகைப்படும். பூர்வக் கிரியை ஓர் உயிர் தாயின் கற்பத்தில் தங்கும் காலம் முதல் பூமியிற் பிறந்து வளர்ந்து வாழ்ந்திருக்கும் காலம் வரையும் செய்யப்படுங் வழிபாடுகளைக் குறிக்கும். அபரக் கிரியை மரண சமயம் முதல் சபிண்டீகரணம் வரையும், அதன் மேல் வருட சிராத்தம், மகாளயம், அமாவாசை தர்ப்பணம் வரையில் விரிந்து செல்கின்றது. இந்த ஆன்மார்த்தக் கிரியையும் நித்தியம், நைமித்தியம், காமியம் என்னும் பிரிவுகளை உடையது. நித்தியம் நாள்தோறும் செய்யப்படும் தியானம், சந்தியாவந்தனம், சிவபூசை என்பவற்றைக் குறிக்கும். நைமித்தியம்: தீட்சை, ஆசாரியாபிஷேகம், விரத உத்தியாபனம், அந்தியெட்டி முதலியவற்றைக் குறிக்கும். காமியம்: விரதம், சாந்தி முதலியவற்றைக் குறிக்கும்.

ஆன்மார்த்தக் கிரியையின் அங்கங்கள்

ஆன்மார்த்தக் கிரியைகளின் அங்கங்களான பூர்வக் கிரியை வகைக்குள் இருது சங்கமனம், கர்ணவேதனம், நாம கரணம், அன்னப் பிராசனம், வித்தியாரம்பம், பூணூல் தரிக்கும் சடங்கு (உபநயனம்), திருமணம், தீட்சை, சந்தியாவந்தனம், ஆசாரியாபிஷேகம், சிவபூசை என்பவை காணப்படுகின்றன.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.