ஆடிட் பீரோ ஆஃப் சர்க்குலேசன்ஸ்
பத்திரிகைகள் குறித்த முழுத் தகவல்களை வழங்கும் அமைப்பாக "ஆடிட் பீரோ ஆஃப் சர்க்குலேசன்ஸ்" எனும் அமைப்பு இயங்குகிறது.
அமைப்பு
பத்திரிகைகளின் உண்மையான சுழற்சி (en: circulation) அதன் விற்பனையைக் கொண்டே கணக்கிடப்படுகிறது. இதற்கு பத்திரிகையாளர்கள் , விளம்பர முகவர்கள் , விளம்பரதாரர் ஆகிய மூன்று பிரிவினருக்கும் உதவ ஒரு அமைப்பு தேவையாய் இருந்தது. 1914 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் ஆடிட் பீரோ ஆஃப் சர்க்குலேசன்ஸ் எனும் அமைப்பு தொடங்கப்பட்டது. இது இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் உள்ளது. இந்தியாவில் இந்த அமைப்பு 1948 ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்டது.
நிர்வாகக் குழு
இந்த அமைப்பிற்கு பங்கு மூலதனம் அல்லது வரையறுக்கப்பட்ட பொறுப்புகள் எதுவுமில்லை. சுயமாகச் செயல்படும் நிர்வாகக் குழு ஒன்றின் கட்டுப்பாட்டில் இது இஅயங்கி வருகிறது. இந்த நிர்வாகக் குழு உறுப்பினர்களில் 50 சதவிகிதம் பேர் சுழல் முறையில் ஓய்வு பெறுகின்றனர். அவ்விடத்திற்கு அடுத்து நடைபெறும் பொதுக்குழுவில் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். விளம்பரதாரரும், விளம்பர நிறுவனத்தினரும் ஒரு பங்கு, பத்திரிகை வெளியீட்டாளர்கள் ஒரு பங்கு என சம அளவில் பிரதிநிதித்துவம் அளிக்கப்படுகின்றன. தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுபவர் சம அளவில் மாறி மாறித் தேர்வு செய்யப்படுகின்றனர். இது கூட்டுறவு முறையில் லாப நோக்கமில்லாமல் செயல்படும் ஒரு அமைப்பாகும். இந்த அமைப்பில் உறுப்பினர்களாக உள்ள பத்திரிகை மற்றும் இதழ் வெளியீட்டாளர்கள், விளம்பரதாரர்கள் மற்றும் விளம்பர முகவர்களிடமிருந்து சந்தாத் தொகை (உறுப்பினர் கட்டணம்) பெறப்படுகிறது. இந்தியாவில் இந்த அமைப்பில் செய்தித்தாள்கள் 96 சதவிகிதமும், இதழ்களில் 64 சதவிகிதமும் உறுப்பினர்களாகத் தங்களை இணைத்துக் கொண்டுள்ளன.
செயல்பாடு
இது ஆண்டுக்கு இரு முறை தன் உறுப்பினர்களிடமிருந்து வரும் சுழற்சி விபரங்களைத் தொகுத்து வெளியிடுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்நிறுவனத்தின் தணிக்கையாளர்கள் ஒவ்வொரு வெளியீட்டகத்திற்கும் சென்று பதிவேடுகளைத் தணிக்கை செய்து உண்மையான சுழற்சிப் புள்ளி விபரங்களைக் கண்டறிகின்றனர். இதன் மூலம் ஒரு இதழ் அல்லது செய்தித்தாள் ஒவ்வொரு பதிப்பிலும் எவ்வளவு பிரதிகள் அச்சிடப்படுகின்றன? எவ்வளவு பிரதிகள் விற்பனையாகின்றன? எங்கு அதிகமாக விற்பனையாகின்றன? என்ன விலை? எந்தப் பொருளைச் சந்தைப்படுத்த இது உதவும்? என பல தகவல்களை இந்த அமைப்பின் ஆண்டறிக்கையில் வெளியிடுகின்றன. இதனை அடிப்படையாகக் கொண்டு விளம்பரதாரர்கள் தங்கள் விளம்பரங்களை குறிப்பிட்ட செய்தித்தாள் மற்று இதழ்களுக்கு வழங்க உதவிகரமாய் இருக்கிறது.