அழும் பெண்
அழும் பெண் (The Weeping Woman) என்பது, பெயர்பெற்ற ஓவியரான பாப்லோ பிக்காசோ வரைந்த ஒரு நெய்யோவியம் ஆகும். 60 X 49 சமீ (23 ⅝ х 19 ¼ அங்) அளவு கொண்ட இது பிரான்சில் 1937ம் ஆண்டு வரையப்பட்டது. இந்த விடயம் தொடர்பில் பிக்காசோ மிகுந்த ஆர்வம் கொண்டிருந்ததோடு அந்த ஆண்டில் இதே விடயத்தைப் பல தடவைகள் வரைந்தார். இத்தொகுதியில் இறுதியானதும், விரிவானதும் இந்த ஓவியம் ஆகும். இது 1987 இலிருந்து இலண்டனிலுள்ள டேட் நிறுவனத்தில் சேகரிப்பில் இருந்து வருகிறது.
![]() டேட் நிறுவனச் சேகரிப்பில் உள்ள அழும் பெண் | |
ஓவியர் | பாப்லோ பிக்காசோ |
---|---|
ஆண்டு | 1937 |
வகை | கன்வசில் நெய்வண்ணம் |
பரிமாணம் | 60 cm × 49 cm (23 ⅝ in × 19 ¼ in) |
இடம் | டேட் நவீனம், இலண்டன் |
குவெர்னிக்காவின் தொடர்ச்சி
அழும் பெண் தொடர் ஓவியங்கள் பிக்காசோவின் மிகவும் புகழ் பெற்ற ஓவியமான குவெர்னிக்காவில் காட்டப்பட்ட துன்பியலின் கருப்பொருட் தொடர்ச்சி ஆகும். அழும் பெண்ணின் உருவத்தில் கருத்தைச் செலுத்தியதன் மூலம், பிக்காசோ, எசுப்பானிய உள்நாட்டு யுத்தத்தின் விளைவுகளில் நேரடியாகக் கவனம் செலுத்தாமல், துன்பப்படுவதன் பொதுவான தோற்றத்தைக் கவனத்தில் எடுத்துள்ளார்.
இவ்வோவியத் தொடருக்கான மாதிரியாக இருந்தவர் டோரா மார் என்பவர். பிக்காசோ இவரை 1936ல் சந்தித்தபோது இவர் தொழில்முறை ஒளிப்படப்பிடிப்பாளராக இருந்தார். 1937ல் பிக்காசோ குவெர்னிக்காவை வரைந்தபோது அதன் தொடர்ச்சியான கட்டங்களை ஒளிப்படம் எடுக்க இவர் மட்டுமே அனுமதிக்கப்பட்டார்.