அழிப்பான்
அழிப்பான் (Eraser) என்பது கரிக்கோலால் எழுதப்பட்டவற்றை அழிக்க உதவும் பொருள் ஆகும்.[1] அழிப்பான்கள் பெரும்பாலும் இளஞ்சிவப்பு நிறத்திலோ வெள்ளை நிறத்திலோ அமைந்திருக்கும். சில கரிக்கோல்கள் அவற்றின் பின் முனையில் அழிப்பானைக் கொண்டிருக்கும். அவ்வாறான அழிப்பான்கள் கரிக்கோல் அழிப்பான்கள் எனப்படும்.[2] பொதுவாக, அழிப்பான்கள் செயற்கை மீள்மத்தின் மூலம் ஆக்கப்படும். ஆனால், விலையுயர்ந்த அழிப்பான்கள் வினைல், நெகிழி ஆகியவற்றின் மூலமும் ஆக்கப்படுவதுண்டு.

வகைகள்

ஓவியக் கோந்து அழிப்பான்
மென்மையான, உருநயமற்ற மீள்மத்தால் ஆக்கப்பட்ட ஓவியக் கோந்து அழிப்பான்கள் ஓவியர்களால் பயன்படுத்தப்படுகின்றது. பாரிய பரப்பில் பயன்படுத்த இவ்வகை அழிப்பான்கள் உகந்தவை. அத்தோடு, ஓவியக் கோந்து அழிப்பான்கள் தாள்களைச் சேதப்படுத்துவதில்லை. ஆனால், இவை துல்லியமாக அழிப்பதில்லை.
மென்னழிப்பான்
மென்னழிப்பான்களும் ஓவியர்களால் பயன்படுத்தப்படும் அழிப்பான்களாகும். இவ்வகை அழிப்பான்கள் சிறிய பரப்பில் பயன்படுத்தப்படுவதுடன், துல்லியமாக அழிக்கவும் பயன்படுத்தப்படுகின்றன. அழிப்பதன் மூலம் இழையமைப்புகளை உருவாக்கவும் மென்னழிப்பான்கள் பயன்படுத்தப்படுகின்றன. மேலும் கோடுகளின் கடுமையைக் குறைப்பதற்கும் மென்னழிப்பான்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவ்வகை அழிப்பான்கள் காரீயத்தைத் தமக்குள் உள்வாங்குவதன் மூலம் அழிக்கின்றன.[3]
மின்னழிப்பான்
மின்னழிப்பான்கள் அவற்றின் முனையில் குமிழ் வடிவில் அழிப்பானைக் கொண்டிருக்கும். அக்குமிழ் வடிவ அழிப்பான் இயக்கியின் மூலம் சுற்றப்படுவதால் தாளிலுள்ள கரிக்கோல் அடையாளங்களை அழிக்கும். இவ்வகை அழிப்பான்கள் விரைவாக அழித்தலை மேற்கோள்ளும்.
மென்வினைல் அழிப்பான்

மென்வினைல் அழிப்பான்கள் நெகிழியைப் போன்ற இழையமைப்பைக் கொண்டிருப்பதுடன், இளஞ்சிவப்பு நிற அழிப்பான்களை விடத் தூய்மையாக அழிக்கும்.[4] மென்வினைல் அழிப்பான்கள் மென்மையாக இருப்பதனால் தாள்களுக்குக் குறைவான சேதத்தையே ஏற்படுத்துகின்றன. இவ்வகை அழிப்பான்கள் மெல்லிய அடையாளங்களை அழிக்கவே பயன்படுத்தப்படுகின்றன. வினைல் அழிப்பான்கள் பெரும்பாலும் வெள்ளை நிறத்தில் அமைந்திருக்கும்.