அறிவுசார் சொத்துரிமைகளின் வணிகம் தொடர்பான அம்சங்கள் குறித்த ஒப்பந்தம்
அறிவுசார் சொத்துரிமைகளின் வணிகம் தொடர்பான அம்சங்கள் குறித்த ஒப்பந்தம் என்பது ஒரு பன்னாட்டு ஒப்பந்தம் ஆகும். உலக வணிக அமைப்பினால் நிர்வகிக்கப்படும் இந்த ஒப்பந்தம் பெரும்பாலான அறிவுசார் சொத்து வகைகள் தொடர்பில் அவற்றின் பாதுகாப்புக்கும் நெறிப்படுத்தலுக்குமான ஆகக்குறைந்த தரங்களை உலக வணிக அமைப்பின் உறுப்பு நாடுகளுக்கு அறிவுறுத்துகின்றது. இது 1994 ஆம் ஆண்டில் உருகுவே நாட்டில் இடம்பெற்ற வரிகள் மற்றும் வணிகம் தொடர்பான பொது ஒப்பந்தம் குறித்த சுற்றுப் பேச்சுக்களின் முடிவில் இணங்கிக்கொள்ளப்பட்டது.
குறிப்பாக அறிவுசார் சொத்துரிமைகளின் வணிகம் தொடர்பான அம்சங்கள் குறித்த ஒப்பந்தம், பின்வரும் விடயங்கள் தொடர்பாக நாடுகளின் சட்டங்களில் இருக்கவேண்டிய விடயங்கள் குறித்துப் பேசுகிறது:
- நிகழ்த்துனர்கள், ஒலிப்பதிவுகளைத் தயாரிப்பவர்கள், ஒலிபரப்பு நிறுவனங்கள் போன்றவர்களின் உரிமைகள் உட்பட்ட பதிப்புரிமைகள்.
- மூலம் குறிக்கும் ஒட்டுப் பெயர்கள் உட்பட்ட புவியியல் அமைவிடங்கள்
- தொழில்சார் வடிவமைப்புக்கள்
- ஒருங்கிணைக்கப்பட்ட சுற்றுத் தளக்கோல வடிவமைப்புக்கள் (integrated circuit layout-designs)
- புதிய தாவர வகைகளை உருவாக்குவோருக்கான தனியுரிமைகள்
- உரிமைக்காப்புகள்
- வணிகக் குறியீடுகள்
- வணிகத் தோற்றம் (trade dress)
- வெளியிடப்படாத அல்லது இரகசியத் தகவல்கள்
இவற்றுடன் இவ்வொப்பந்தம் மேற்படி விடயங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பான வழிமுறைகளையும், தீர்வுகள், தகராறுகளுக்கு இணக்கம் காணும் வழிமுறைகள் போன்றவை குறித்த விடயங்களையும் எடுத்துக் கூறுகிறது. அறிவுசார் சொத்துரிமைகளுக்குப் பாதுகாப்பளித்து நடைமுறைப்படுத்துவது என்பது, உருவாக்குபவர்களுக்கும், பயன்படுத்துபவர்களுக்கும் பயன் கிடைக்கத்தக்க வகையிலும் சமூக பொருளாதார நலன்களுக்கு ஏற்ற முறையிலும், தொழில்நுட்பப் புத்தாக்கங்களையும் தொழில்நுட்பங்களின் பரவலையும் ஊக்குவிக்கும் நோக்கங்களை அடைய உதவவேண்டும். அத்துடன் இது உரிமைகளுக்கும் கடமைகளுக்கும் இடையிலான சமநிலையைப் பேணத்தக்க வகையிலும் இருக்கவேண்டும்.
அறிவுசார் சொத்துரிமை தொடர்பான சட்டம் ஒன்றை பன்னாட்டு வணிக முறைமையில் முதல் முதலாக அறிமுகப்படுத்தியதுடன், இன்றுவரையில் அறிவுசார் சொத்துரிமைகள் தொடர்பான மிகவிரிவான பன்னாட்டு ஒப்பந்தமாகவும் "இவ்வொப்பந்தம் உள்ளது.