அறிவியல் புரட்சி
நவீனக் கண்ணோட்டமும், அணுகுமுறையும் உறுதியாக நிறுவப்பட்ட பின் ஒவ்வொரு துறையும் புரட்சிகரமான மாற்றங்களைக் கண்டது. அறிவியல் என்பது வளரக் கூடியது; ஆராய்ந்து அறியக் கூடிய மனித ஆற்றலே அதன் அடிப்படை என்றும் மாற்றமுடியாத இறைநெறிக் கொள்கைகள் அல்ல என்பதை நவீன சிந்தனைகள் நிலைநிறுத்தின. இதன்விளைவாக நவீன காலத்தில் அறிவியல் மனித வரலாற்றில் என்றும் காணாத அளவுக்கு பெருவளர்ச்சி பெற்றது. அனைத்துக் கொள்கைகளும் செய்முறையில் நிறுவப்பட்ட பின்னரே ஏற்றுக் கொள்ளப்பட்டன. இதனால் செய்முறை அறிவியல் வளர்ச்சியடைந்து தொழில்நுட்பம் முன்னேற்றம் கண்டது.
நவீன அறிவியல் மற்றும் ஆராய்ச்சியின் அணுகுமுறைகளை முதன் முறையாக தத்துவ அடிப்படையில் தொகுத்தவர் ரெனெ தேகார்த் (Rene Descartes) எனும் பிரெஞ்சு தத்துவவியலாளர் ஆவார். இவரை நவீன தத்துவம் மற்றும் அறிவியலின் தந்தை எனக் கருதுகிறார்கள்.