அறம் பாடுதல்

அறம் பாடுதல் என்பது தமிழ் இலக்கியத்தில் ஒரு கவிஞன் தனக்கு அநீதி இழைக்கப்பட்டதாக உணரும்போது அநீதி இழைத்தவர் அழியவேண்டும் என்று சாபமிட்டு பாடல் எழுதும் செயலாகும். வஞ்சப்புகழ்ச்சியாக அவ்வாறு எழுதுவதும் உண்டு. இது தவிர கவிஞன் நினைக்காமல் எழுதிய ஒரு பாடலின் தவறான பொருள் பலித்துவிடுவதை அறம்பற்றுதல் அல்லது அறமாதல் என்பார்கள். இது தொன்மையான தமிழ் நம்பிக்கை. சரியாக சொல்லப்பட்ட வார்த்தை கொல்லும் தன்மை கொண்டது என்பதே இந்த நம்பிக்கையின் ஆதாரம். இது தொலதமிழ்ப் பண்பாட்டில் சொல் எப்படி மதிக்கப்பட்டது என்பதைக் காட்டுகிறது. கவிதை எப்போதும் அறத்தின் பக்கமே நிற்கும் என்ற நம்பிக்கையையும் காட்டுகிறது.

வரலாறு

சங்கப்பாடல்களில் அறம்பாடுதலைப்பற்றி ஏதும் வரவில்லை. ஆனால் புலவர்கள் ஒரு மன்னனை பாடாது விடுவதென்பது மாபெரும் தண்டனையாக கருதப்பட்டது. பெண்கொலை புரிந்த நன்னன் என்ற மன்னனை புலவர்கள் புறக்கணித்தமையால் அவன் தீராப்பழிக்கு ஆளானான் என்று புறநாநூறு பாடல்கள் சொல்கின்றன.

பின்னர் சமணத்தின் பாதிப்பால் அறம்பாடும் முறை உருவாகியிருக்கலாம். சமண முனிவர்கள் அவர்களை மீறி ஓர் அநீதி நிகழ்ந்தால் அந்த இடத்துக்குச் சென்று உண்ணாநோன்பிருந்து உயிர்விடுவார்கள். அஞ்சினான் புகலிடம் என்ற அமைப்பு சமணர்களுக்கு உரியது. சமண முனிவர்கள் எல்லை வகுத்து அமைத்த அந்த இடத்துக்குள் எவரும் எவரையும் கொல்லக்கூடாது. அப்படி கொல்லப்பட்டால் கொன்றவன் வாசலில் அனைத்து சமண முனிவர்களும் உயிர் துறப்பார்கள். அதன்பின் அந்த மன்னனும் மக்களால் வெறுக்கபடுவான். அதே மனநிலை அறம்பாடுவதில் காணக்கிடைக்கிறது.

தமிழ் மரபில் அறம்பாடுதலின் புகழ்பெற்ற கதை இரண்டாம் நந்திவர்ம பல்லவனைப் பற்றியது. இவன் தன் தாயாதிகளை வாரிசுப்போரில் அறமில்லாமல் கொன்றொழித்தான். தப்பி ஓடிய ஒரு தாயாதியின் வாரிசு தமிழ் கற்று வார்த்தைக்கு வார்த்தை அறம் வைத்து நந்திக் கலம்பகம் என்ற நூலை எழுதி அரங்கேற்றினான். அறச்சாபம் ஏற்ற நந்திவர்மன் சிதைகூட்டச்சொல்லி அதில் ஏறி உயிர்துறந்தான்.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.