அருந்ததி பட்டாச்சார்யா

அருந்ததி பட்டாச்சார்யா என்பவர் பாரத ஸ்டேட் வங்கியின் தலைவர்.[1] இவர் இந்த வங்கியின் முதல் பெண் தலைவர் ஆவார். 2016 இல் அதிகாரமிக்கவர்களில் இவர் 25 ஆவது இடத்தில் இருப்பதாக போர்ப்ஸ் இதழ் கணித்தது. இவர் 2017 ஆக்டோபர் 6 ஆம் திகதியில்  ஒய்வு பெறுகிறார்.

அருந்ததி பட்டாச்சார்யா

வாழ்க்கைக் குறிப்புகள்

கொல்கத்தா நகரில் ஒரு வங்கக் குடும்பத்தில் பிறந்த அருந்ததி பட்டாச்சார்யா, பிலாய் என்ற ஊரில் தமது இளமைக் காலத்தைக் கழித்தார். இவருடைய தந்தை பரோதியுள் குமார் முகர்சி பொகாரோ இரும்புத் தொழிற்சாலையில் பணி புரிந்தார். தாயார் ஓமியோபதி மருத்துவராக இருந்தார். அருந்ததி பட்டாச்சார்யா பொகாரோவில் தூய சேவியர் பள்ளியில் படித்தார்.[2] கொல்கத்தாவில் உள்ள லேடி பிரபோன் கல்லூரியில் ஆங்கில இலக்கியமும் பின்னர்  ஜாதவ்பூர் பல்கலைக் கழகத்திலும் கல்வி பயின்றார். இவருடைய கணவர் பிரிதிமாய் பட்டாச்சார்யா கரக்பூர் ஐஐடியில்  பேராசிரியராக இருந்தார்.[3]

வங்கிச் செயல்கள்

1977 ஆம் ஆண்டில் செப்டம்பரில் பாரத் ஸ்டேட் வங்கியில் பணியில் பயிற்சி அதிகாரியாகச்  சேர்ந்தார். அயலகப் பண மாற்றுத் துறை, கருவூலம், சில்லறை வணிகம், முதலீட்டுத் துறை, மனித வளம் எனப் பல் வேறு பொறுப்புகளில் வங்கியில் பணி ஆற்றினார். நியுயார்க்குக் கிளையிலும் பணி செய்தார். மெர்ச்சண்ட் பாங்கிங், கேபிடல் மார்க்கட் போன்ற பிரிவுகளில் முதன்மை அதிகாரியாக இருந்தார். எஸ்பிஐ கஸ்டோடியல் சேவைகள், எஸ்பிஐ ஜெனரல் இன்சூரன்சு, எஸ்பிஐ பென்சன்ட் பண்ட் போன்ற புதிய திட்டங்களில் ஆர்வமாக ஈடுபட்டு சேவை செய்தார்.[4] இருநூறு ஆண்டுகள் பழைமை வாய்ந்த பாரத ஸ்டேட் வங்கியில் அண்மை வளர்ச்சியான தொழில் நுட்பத்தை மேம்படுத்தினார். டிஜிட்டல் வங்கிகள், மொபைல் வெலட், திறன்பேசி மூலம் சில்லறை வர்த்தகச் சேவை போன்றவற்றை அறிமுகப்படுத்தினார். இவரது பதவிக் காலத்தில் ஐந்து துணை வங்கிகளான ஸ்டேட் பாங்க் ஆப் பிகானீர் அண் ஜெய்ப்பூர்  ஸ்டேட் பாங்க் ஆப் ஐதராபாத் ஸ்டேட் பாங்க் ஆப் மைசூர், ஸ்டேட் பாங்க் ஆப் பாட்டியாலா, ஸ்டேட் பாங்க் ஆப் திருவாங்கூர் மற்றும் பாரதிய மகிளா வங்கி ஆகியன பாரத் ஸ்டேட் வங்கியுடன் இணைந்தன. இதன் பலனாக  பாரத  ஸ்டேட் வங்கி உலக அளவில் 50 வங்கிகளில் ஒன்றாகத் திகழும் என்று நம்பப்படுகிறது.

பெற்ற சிறப்புகள்

அயலகக்  கொள்கை (பாரீன் பாலிசி) என்ற இதழில் நூறு உலக முன்னணியினரில் இவர் முதன்மையானவர் என்று கூறப்பட்டது.[5]

2017 இல் பார்ச்சூன் இதழில் ஆசிய பசிபிக் நாடுகளில் 4 ஆவது அதிகாரமிக்க பெண் எனச் சிறப்பிக்கப் பெற்றார்.[6]

இந்திய டுடே என்ற ஆங்கில இதழில் 50 பேரில்  19 ஆவது அதிகாரமிக்க ஆளுமையாகக் கணிக்கப்பட்டார்.[7]

மேற்கோள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.