அரசு சார்பற்ற அமைப்பு

அரசு சார்பற்ற அமைப்பு அல்லது அரசு சாரா தொண்டு நிறுவனம் (Non-governmental organization NGO) என்பது தனியாரால் அல்லது அரச பங்களிப்போ, சார்பாண்மையோ அற்ற நிறுவனங்களினால் சட்டப்படி உருவாக்கப்படுகின்ற அமைப்புக்களாகும். அரசினால் முழுமையாக அல்லது பகுதியாக நிதியளிக்கப்படும் அமைப்புக்கள் தங்கள் அரசு சார்பின்மையைக் காத்துக் கொள்வதற்காக அரசுக்குத் தமது அமைப்பில் எவ்வித உறுப்புரிமையும் அளிப்பதில்லை.

பல்வேறு நாடுகளில் தேசிய அளவிலும், உலக அளவிலும் பல அரசு சார்பற்ற அமைப்புக்கள் இயங்கி வருகின்றன. உலக அளவில் 40,000 அரசு சார்பற்ற அமைப்புக்கள் இயங்குவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. தேசிய அளவில் இயங்குபவை இவற்றைவிட மிகவும் கூடுதலாகும். ரஷ்யாவில் சுமார் 400,000 அரசு சார்பற்ற அமைப்புக்களும், இந்தியாவில் 32,000,000 அமைப்புக்களும் இருப்பதாகக் கூறப்படுகின்றது.[1]

வரலாறு

அனைத்துலக அரசு சார்பற்ற அமைப்புக்களின் வரலாறு 19 ஆம் நூற்றாண்டின் நடுப் பகுதியிலிருந்து தொடங்குகின்றது எனலாம். இவை அடிமை ஒழிப்பு இயக்கம், பெண்கள் துன்பங்களுக்கு எதிரான இயக்கம் போன்றவை தொடர்பில் முக்கியமானவையாக இருந்தன. உலக ஆயுதக் களைவு மகாநாட்டுக் காலத்தில் இவற்றின் முக்கியத்துவம் உச்சக் கட்டத்தை எட்டியது எனலாம். எனினும் அரசு சார்பற்ற அமைப்பு என்னும் பெயர் 1945 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் அவையின் தோற்றத்துக்குப் பின்னரே பெரிய அளவில் பயன்பாட்டுக்கு வந்தது. ஐக்கிய நாடுகள் அவைப் பட்டயத்தின் அத்தியாயம் 10 பிரிவு 71, அரசோ அல்லது உறுப்பு நாடுகளோ அல்லாத அமைப்புக்கள் ஆலோசனை வழங்கும் அமைப்புக்களாகக் குறிக்கப்பட்டுள்ளன.

மேற்கோள்கள்

  1. எம். ரமேஷ் (2018 சூன் 2). "இவர்களின் நோக்கம்தான் என்ன?". கட்டுரை. இந்து தமிழ். பார்த்த நாள் 3 சூலை 2018.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.