அம்மி
அம்மி என்பது கருங்கல்லினால் செய்யப்பட்ட, மருந்து அல்லது சமையலில் பயன்படும் பொருட்களை அரைப்பதற்கு உதவக்கூடிய, சமதளமாக அமைந்த ஒரு கருவியாகும். அம்மிக் கல்லில் பொருளை இட்டு அரைக்க உருளை வடிவில் குழவி என்று அழைக்கப்படும் ஒரு கருங்கல் பயன்படுகின்றது. இந்தக் குழவியை இரு கைகளாலும் பற்றி, உருட்டியும் இடித்தும் இழுத்தும் பொருட்கள் அரைக்கப்படும். இது தொல்பழங்காலத்தில் இருந்து பயன்பாட்டில் இருந்துவரும் ஒரு கற்கருவி ஆகும். அம்மியும் குழவியும் பயன்படப் பயன்பட மழுமழுப்பாகிவிடும், இதனால், பொருட்கள் சரியாக அரைபடாது. எனவே, கல்தச்சர் ஒருவரைக் கொண்டு, உளியால் பொள்ளி நுண்ணிய சிறு சிறு குழிகள் ஆக்குவர் (பொள்ளுதல் = குழி இடுதல்). இதற்கு அம்மி பொளிதல் என்று பெயர். அம்மியையும் குழவியையும் இவ்வாறு பொளிதலால் உராய்வு நன்றாக ஏற்பட்டு, பொருட்கள் நன்றாக அரைபடும். தமிழகத்தில், குறிப்பாக இது சிற்றூர்களில், இன்றளவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது சமையலுக்குத் தேவையான மஞ்சள், சீரகம் உள்ளிட்ட பொருட்களை அரைப்பதற்கு உதவுகிறது.
ஓர் அம்மிக்கல்லின் எடை (குழவிக்கல் நீங்கலாக) ஏறக்குறைய நாற்பது கிலோ இருக்கும்.
தமிழகக் கிராமங்களில் ஊருக்குப் பொதுவான இடத்தில் ஓர் அம்மியும் ஓர் ஆட்டுக்கல்லும் வைக்கப்படும். தேவையானவர்கள் அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
பிற பயன்பாடுகள்
- இந்து சமயத் திருமணச் சடங்குகளில் அம்மி மிதிப்பது ஒரு பிற்கால வழக்கமாகும்.