அம்பிகாபதிக் கோவை

அம்பிகாபதிக் கோவை என்பது கோவை சிற்றிலக்கிய வடிவில் அமைந்த ஒரு தமிழ் இலக்கியம் ஆகும். இதில் 32 இயல்கள் உள்ளன. [1]

அம்பிகாப்பதிக்கோவை என்பது அகப்பொருள் நுழையாத, சிறப்பிக்கப்படுபவர் பெயர் இல்லாமல் பாடப்பட்டுள்ள கோவை நூல். இதன் ஆசிரியர் அம்பிகாபதி.

  • அம்பிகாபதியின் தந்தை தமிழில் இராமாயணம் பாடிய கம்பர் எனக் காட்டும் கதை ஒன்று உண்டு.
  • தண்டியலங்காரம் பாடிய இலக்கணப்புலவர் தண்டியின் தந்தை என ஒரு ஆய்வு முடிவு கூறுகிறது.

இந்த நூல் பாடல்-தலைவனின் பெயர் கொண்டு அமையாமல் ஆசிரியரின் பெயர்பூண்டு விளங்குகிறது. [2]

கம்பன் மகன் கதை

நிகழ்வு

குலோத்துங்க சோழனின் அவைக்களப் புலவர் கம்பர். இராமாயண அரங்கேற்றத்துக்குப் பின் சோழன் கம்பனுக்கு விருந்து வைத்தான். விருந்துக்குக் கம்பன் மகன் அம்பிகாபதியையும் அழைத்திருந்தான். அரசன் தன் மகளைக்கொண்டு விருந்து பரிமாறச் செய்தான். அம்பிகாபதி அவளைக் கண்டதும் காம வயப்பட்ட பாடல் ஒன்றைப் பாடத் தொடங்கினான்.

இட்டடி நோவ எடுத்தடி கொப்புளிக்க
வட்டில் சுமந்து மருங்கசைய

என்று தொடங்கியதும் கம்பன் தன் மகன் நிலையை உணர்ந்துகொண்டான். அரசன் உணருமுன் அதனை மறைக்க எண்ணிய கம்பன் பின் இரண்டு அடிகளைத் தான் பாடிப் பாடலை முடித்தான். கம்பன் பாடிய பின் இரண்டு அடிகள்

- கொட்டிக்
கிழங்கோ கிழங்கென்று கூறுவாள், எந்தை
வழங்கோசை வையம் பெறும்.

என்றாலும் அரசன் புரிந்துகொண்டான். காதல் சுவை புலப்படாமல் அம்பிகாபதி 100 பாடல்கள் பாடினால் கம்பன் கூற்று உண்மை எனவும், பாடாவிட்டால் அம்பிகாபதியின் தலை துண்டிக்கப்படும் என்றும் ஆணையிட்டான். அம்பிகாபதி ஒப்புக்கொண்டு மறுநாள் அரவையில் காதல்சுவை கலக்காத கட்டளைக் கலித்துறைப் பாடல்களைப் பாடினான். அவன் பாடியதை உப்பரிகையின்மேல் மறைவாக இருந்து பார்த்துக்கொண்டிருந்த இளவரசி 99 பாடல் முடிந்ததும், காப்புச் செய்யுளையும் சேர்த்து எண்ணி 100 பாடல் முடிந்துவிட்டதாகக் கருதி மறைவிடத்திலிருந்து வெளிவந்தாள். அவளைக் கண்ட அம்பிகாபதி 100 பாடல் முடிந்துவிட்டதாகத் தானும் கருதி 100ஆவது பாடலை [3] அவள்மீது பாடிவிட்டான். அந்தப் பாடல்.

சற்றே பருத்த மனமே குலுங்கத் தரளவடம்
துற்றே அசையக் குழைஊசல் ஆட துவர்கொள்செவ்வாய்
நற்றேன் ஒழுக நடனசிங் கார நடையழகின்
பொற்றேர் இருக்கத் தலையலங் காரம் புறப்பட்டதே.

அரசன் அம்பிகாபதியின் தலையை வெட்ட ஆணையிட்டான். கம்பன் மன்னித்தருளும்படி மன்றாடினான். அரசன் கேட்க வில்லை. அம்பிகாபதியின் தலை துண்டிக்கப்பட்டது. சினம் கொண்ட கம்பன் சோழர் குலம் அழிந்துபோகும்படி சாபமிட்டுப் பாடினான். அந்தப் பாடல்:

வில்லம்பு சொல்லம்பு மேதினியில் ரெண்டுண்டு
வில்லம்பில் சொல்லம்பே மேலதிகம் – வில்லம்பு
பட்டதடா என்மார்பில் பார்வேந்தா நின்குலத்தைச்
சுட்டதடா என்வாயிற் சொல்.
  • இந்தப் பாடலில் வரும் ‘ரெண்டு’ என்னும் சொல்லும், பாடல் நடையும் இது கம்பராமாயணத் தமிழ் அன்று என்பதைத் தெளிவாக்கும். எனவே இதனைக் கதை புனையக் கட்டிய பாடல் என்க.
  • குலோத்துங்கன் மகனான இராசராசன் ஆட்சிக்குப் பின்னர் மகன் அரசாளும் நேர் அரசபரம்பரை அறிபட்டுப் போனாலும் 100 ஆண்டுகள் கழிந்த பின்னரே 1279-ல் சோழர் ஆட்சி முடிவுக்கு வந்தது,

அம்பிகாபதி தண்டியின் தந்தை

கோவை பாடிய அம்பிகாபதி, தண்டியலங்காரம் செய்த தண்டியின் மகன் என மு. அருணாசலம் சான்றுகளுடன் நிறுவுகிறார். அவர் காட்டும் சான்றுகள்:

  • தண்டியலங்காரம் சிறப்புப்பாயிரம் [4]
  • தண்டியலங்காரம் நூற்பா 95 உரை காட்டும் மேற்கோள் பாடல்[5]

அம்பிகாபதிக்கோவை பாடல்

  • எடுத்துக்காட்டு

1

கறியுறு சாரல் களியுறு தோகைக் கணநடஞ்செய்
வெறியுறு சோலை விழைவுற நீடில் வெருவுறுமான்
மறியுறு செங்கண் மதுமலர்க் கோதை நொதுமலர்வந்(து)
அறியுறக் கூடுமென் றோதிரு மேனி அழுங்குவதே. (கோவை பாடல் எண் 11)

2

களிதங்கு தோகைக் கணம்நடம் ஆடக் கரங்கருவி
அளிதங்கு சோலை அருவரை நாட, அளிபைங்கிள்ளை
விளிதங்கு தண்புன வேங்கையும் பூத்தது விண்ணிடைநின்(று)
ஒளிதங்கு திங்களும் நீர்கொண்ட கேண்மையும் ஊர்கொண்டதே
  • இந்த நூலின் காலம் 12ஆம் நூற்றாண்டு. (கோவை பாடல் எண் 265)

கருவிநூல்

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பன்னிரண்டாம் நூற்றாண்டு, பாகம் 2, 2005
  • மு. அருணாசலம் 1898 அரிக்கரையர் அம்பிகாபதிக்கோவை மூலமும் குறிப்புரையும், பதிப்புக்கு ஆராய்ச்சியுரை பதிப்பு, 1944

அடிக்குறிப்பு

  1. இந்த நூல் முதன் முதலில் 1899 அச்சில் பதிக்கப்பட்டது. 1941 ம் ஆண்டில் சைவ சிந்தாந்த நூற்பதிப்பாகவும் இது வெளிவந்துள்ளது.
    • நெல்வேலி நெடுமாறனைச் சிறப்பிக்கப் பாடிய நூல் பாண்டிக்கோவை.
    • தில்லை இறைவன் அம்பலவாணரைச் சிறப்பிக்கப் பாடிய நூல் திருக்கோவையார்.
    • தஞ்சை வள்ளல் தஞ்சைவானனைச் சிறப்பிக்கப் பாடிய நூல் தஞ்சைவாணன் கோவை.
  2. நூலில் 200-க்கும் பேற்பட்ட பாடல்கள் உள்ளன.
  3. பூவிரி தண்பொழில் காவிரி நாட்டு
    வம்பவிழ் தெருயல் அம்பி காபதி
    மேவருந் தவத்தில் பயந்த
    தவலருஞ் சிறப்பின் தண்டி என்பவனே.
  4. தண்டியலங்கார நூற்பாக்களுக்கு அதன் ஆசிரியர் தாமே எழுதிய பாடல்களை மேற்கோளாகத் தந்துள்ளார். அவற்றில் ஒரு பாடலில் ‘ஆதரித்தீர், அன்னைபோல் இனியாய், அம்பிகாபதியே’ எனத் தன் தந்தையைப் போற்றியுள்ளார்.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.