அன்னை பூபதி

அன்னை பூபதி (நவம்பர் 3, 1932 - ஏப்ரல் 19, 1988), மட்டக்களப்பில் இந்திய அமைதி காக்கும் படைக்கு எதிராக சாகும் வரை உண்ணாநிலையிருந்து உயிர் நீத்தவர்.

அன்னை பூபதி
பூபதி கணபதிப்பிள்ளை
அமைப்புமட்டக்களப்பு-அம்பாறை அன்னையர் முன்னணி
பிறப்புநவம்பர் 3, 1932
பிறந்த இடம்மட்டக்களப்பு,  இலங்கை
நோன்பு ஆரம்பம்மார்ச் 19, 1988
இறப்புஏப்ரல் 19, 1988
(அகவை 56)
நோன்பிருந்த நாட்கள்31

பூபதியம்மாவின் கணவர் பெயர் கணபதிப்பிள்ளை. பத்துப்பிள்ளைகளின் தாய். மட்டக்களப்பு - அம்பாறை அன்னையர் முன்னணியின் செயற்பாட்டாளர். விடுதலைப் புலிகளுக்கும் இந்திய அமைதிப்படைக்கும் சண்டை நடந்து கொண்டிருந்த காலம். அந்தக் காலத்தில் இந்தியப் படைக்கு எதிராக குரல் கொடுக்க, அறப் போராட்டங்களை நடத்த மட்டு-அம்பாறை மாவட்ட அன்னையர் முன்னணி முடிவு செய்தது. அவர்கள் இரண்டு கோரிக்கைகளை முன்வைத்து இந்திய அரசுக்கெதிராக உண்ணா நோன்புப் போராட்டத்தைத் தொடங்கினர்.

அவையாவன:

  1. உடனடியாக போர் நிறுத்தத்தை நடைமுறைப்டுத்த வேண்டும்.
  2. புலிகளுடன் பேச்சு நடத்தித் தீர்வு காணவேண்டும்.

இந்திய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை

அன்னையர் முன்னணியின் கோரிக்கைகள் எதுவுமே இந்தியப்படையினரின் கவனத்தை ஈர்க்கவில்லை. ஆனால் தமிழ்ப் பெண்கள் அடையாள உண்ணாநோன்புப் போராட்டத்தில் அணி திரண்ட நிலையில் 1988ம் ஆண்டு ஜனவரி 4 ம் திகதி அன்னையர் முன்னணியைத் திருமலைக்குப் பேச்சு வார்த்தைக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் கோரிக்கைகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. போராட்டம் தொடர்ந்து நடந்தது. 1988 ம் ஆண்டு பெப்ரவரி 10 ஆம் தேதி அன்னையர் முன்னணியின் நிர்வாகக் குழுவினர் கொழும்பில் இந்திய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தை முறியவே சாகும் வரை உண்ணாநோன்புப் போராட்டத்தைத் தொடங்க முடிவு எடுத்தனர்.

உண்ணாநிலைப் போராட்டம்

அப்போது பலர் சாகும் வரை உண்ணாநோன்புப் போராட்டத்தில் குதிப்பதற்காக முன்வந்தனர். இறுதியில் குலுக்கல் முறையில் தேர்வு இடம் பெற்றது. முதலில் அன்னம்மா டேவிட் தெரிவு செய்யப்பட்டார். 1988ஆம் ஆண்டு பெப்ரவரி 16 ஆம் நாள் அமிர்தகழி மாமாங்கேஸ்வர் கோயிலில் அன்னம்மாவின் உண்ணாநோன்புப் போராட்டம் தொடங்கியது. ஆனால் படையினர் உண்ணாவிரத மேடையில் இருந்தவரைக் கடத்திச் சென்றதில் அவரால் தனது போராட்டத்தை நிறைவேற்ற முடியவில்லை.

அன்னைபூபதி போராட்டம்

இந்த நிலையில் தான் பூபதியம்மாள் தன் போராட்டத்தை மார்ச் 19 1988 இல் தொடங்கினார். முன்னெச்சரிக்கையாக "சுயவிருப்பின் பேரில் உண்ணாவிரதமாயிருக்கிறேன். எனக்கு சுயநினைவிழக்கும் பட்சத்தில் எனது கணவனோ, அல்லது பிள்ளைகளோ என்னை வைத்தியசாலையில் அனுமதிக்க முயற்சிக்கக் கூடாது" எனக் கடிதம் எழுதி வைத்தார்.பத்துப்பிள்ளைகளுக்கு, தாயார் இவர்.நீர் மட்டும் அருந்தி சாகும் வரை உண்ணாநோன்பு இருந்தார்.இடையில் பல தடங்கல்கள் வந்தன.உண்ணாவிரதத்துக்கு ஒத்துழைப்பு வழங்கியவர்களையும், அன்னை பூபதியின் பிள்ளைகள் சிலரையும், இந்திய இராணுவம் கைது செய்தது. ஆயினும் போராட்டம் நிறுத்தப்படவில்லை. அவர் உறுதியாகப் போராட்டத்தைத் தொடர்ந்தார். கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்படாத நிலையில் சரியாக ஒரு மாதத்தின் பின் 19.04.1988 அன்று உயிர் நீத்தார்.

அன்னை பூபதியின் நினைவுநாள் தமிழீழ நாட்டுப்பற்றாளர் நாள் என்றும் நினைவு கூறப்படுகிறது.

இவற்றையும் பார்க்கவும்

உசாத்துணை

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.