அனுராதா ரமணன்

அனுராதா ரமணன் (Anuradha Ramanan) (ஜூன் 29, 1947 – மே 16, 2010)[1] சிறந்த தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர். பல்வேறு தலைப்புகளில் புதினங்கள், சிறுகதைகளை எழுதியுள்ளார். இவரது சில கதைகள் தொலைக்காட்சித் தொடர்களாகவும், திரைப்படங்களாகவும் வெளிவந்திருக்கின்றன. தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளிலும் இவரது படைப்புகள் வெளியாகிச் சிறப்பு பெற்றிருக்கின்றன.

அனுராதா ரமணன்

தொழில்
  • எழுத்தாளர்
  • ஓவியர்
  • சமூக செயற்பாட்டாளர்
எழுதிய காலம் 1977—2010

வாழ்க்கைக் குறிப்பு

1947 இல் அனுராதா தமிழ் நாட்டிலிலுள்ள தஞ்சாவூரில் பிறந்தவர். நடிகரான அவரது தாத்தா ஆர். பாலசுப்பிரமணியத்தின் தூண்டுதலால் இவர் எழுத்தாளரானார்.[2] இவர் கணவர் பெயர் ரமணன்[3]. இவர்களுக்கு இரண்டு மகள்கள் உண்டு.

ஒரு ஓவியக் கலைஞராகத் தனது பணியைத் தொடங்கிய அனுராதா தொடக்கத்தில் முக்கியமான இதழ்களில் வேலைதேடி முயற்சித்தார். ஆனால் அவரது முயற்சிகள் பலனளிக்கவில்லை.[2] பின் ’மங்கை’ இதழாசிரியர் அனுராதாவின் படைப்புகள் நன்றாக இருப்பதை அறிந்து அவரைப் பணியில் சேர்த்துக் கொண்டார். 1977 இல் மங்கை இதழ் மூலமாக தனது எழுத்துலகப் பணியைத் தொடங்கினார் அனுராதா.[2]

இலக்கியப் பணி மட்டுமின்றி விவாகரத்துக் கோரும் தம்பதியருக்கு சேர்ந்துவாழ ஆலோசனை வழங்கும் பணியிலும் ஈடுபட்டிருந்தார்[4] 30 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 800 புதினங்களும் 1,230 சிறுகதைகளும் எழுதியுள்ளார்.[2] அவரது கதைகள் பெரும்பாலும் குடும்பத்தையும் அன்றாட நிகழ்வுகளையும் மையமாகக் கொண்டிருந்தன. ஆனந்த விகடனில் வெளியான அவரது சிறுகதை ’சிறை’, சிறந்த சிறுகதைக்கான தங்கப் பதக்கம் வென்றது.[3] இச் சிறுகதை அதே பெயரில் திரைப்படமாக எடுக்கப்பட்டது.[3] கூட்டுப்புழுக்கள், மலரின் பயணம், ஒரு வீடு இருவாசல் ஆகிய புதினங்களும் தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் திரைப்படமாக எடுக்கப்பட்டன.[2] அவற்றுள் கே. பாலசந்தர் இயக்கிய ஒரு வீடு இரு வாசல் திரைப்படம் பிற சமூக சிக்கல்கள் மீதான சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதினை 1991 இல் பெற்றது. [5] இவரது கதையைக் கொண்டு 1988 இல் வெளியான ஒக்க பாரிய கதா என்ற தெலுங்குத் திரைப்படம் ஐந்து நந்தி விருதுகளை வென்றது.[6] மேலும் இவரது கதைகள் அர்ச்சனைப் பூக்கள், பாசம், கனாக்கண்டேன் தோழி போன்ற இவரது பல கதைகள் தொலைகாட்சித் தொடர்களாகவும் எடுக்கப்பட்டுள்ளன.[3] தமிழ்நாட்டின் அப்போதைய முதலமைச்சர் எம். ஜி. ஆர் இவருக்குத் தங்கப்பதக்கம் வழங்கியுள்ளார்.[3]

இறப்பு

மே 16, 2010 இல் மாரடைப்பால் சென்னையில் தனது 62 வது அகவையில் இவர் மரணமடைந்தார்.[3]

திரைப்படங்கள்

  • சிறை
  • கூட்டுப்புழுக்கள்
  • ஒரு மலரின் பயணம்
  • ஒரு வீடு இருவாசல்

தொலைக்காட்சித் தொடர்கள்

  • பாசம்
  • புன்னகை
  • அர்ச்சனைப் பூக்கள்
  • பன்னீர் புஷ்பங்கள்

பதக்கம்


மேற்கோள்கள்


வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.