அனந்து பை

இந்தியர்களால் பாசமாக பை மாமா (Uncle Pai) என அழைக்கப்படும் புகழ்பெற்ற கல்வியாளர் மற்றும் படைப்பாளி அனந்து பை ஆவார். இவர் கர்நாடகாவில் உள்ள கர்காலா என்னும் ஊரில் 1929ம் ஆண்டு பிறந்தார். இவரது குறிப்பிடத்தக்கப் படைப்பான அமர் சித்ர கதை 1967ம் ஆண்டு இந்தியன் புக் அவுசு என்னும் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. இவர் குழந்தைக்களுக்கான கதையெழுதுவதில் சிறப்பு வாய்ந்தவர். இவர் நிறுவித்த டிங்கிள் என்னும் இதழ் குழந்தைக்களுக்கான கதை, விளையாட்டுக்கள், புதிர் உள்ளிட்டவற்றை உள்ளடக்கியதாகும்.[1][2]

அனந்து பை
பிறப்புசெப்டம்பர் 17, 1929(1929-09-17)
கர்காலா, கர்நாடகா
இறப்பு24 பெப்ரவரி 2011(2011-02-24) (அகவை 81)
மும்பை, மகாராட்டிரம்
தேசியம்இந்தியா
அறியப்படுவதுஅமர் சித்ர கதை
வாழ்க்கைத்
துணை
லலிதா பை
வலைத்தளம்
http://www.unclepai.com/

இவர் எழுதிய அமர் சித்ர கதை என்பது நாடு முழுதும் 20க்கும் மேற்பட்ட மொழிகளிலும் ஆங்கிலத்திலும் வெளிவந்துள்ளது. 2 கோடிக்கும் மேற்பட்ட பதிப்புகள் விற்பனையாகியுள்ளது [3]

இளமை

கர்நாடகாவின் கர்கலாவில் வேங்கடராயா - சுஷீலா பை தம்பதியினரின் மகனாக 17.09.1929 ல் பிறந்தவர் ஆனந்த். இரண்டாம் வயதிலேயே பெற்றோரை இழந்த இவர், உறவினர்களால் வளர்க்கப்பட்டார். தனது பன்னிரண்டாம்வயதில் மும்பை வந்த ஆனந்த் மாஹிம் என்ற இடத்தில் பள்ளிப்படிப்பை முடித்தார். மும்பை பல்கலைக்கழகத்தில் இரசாயனத் தொழில்நுட்பத்தில் பட்டம் பெற்றார். 1954 ல் 'மானவ்' என்ற குழந்தைகள் இதழைத் தொடங்கி நடத்த முடியாமல் கைவிட்டார். பிறகு, டைம்ஸ் ஆப் இந்தியாவின் 'இந்திரஜால்' காமிக்ஸ் வெளியீட்டு பிரிவில் பணி புரிந்தார்.

குழந்தைகளுக்கான புத்தகம் தொடங்குதல்

1967 ல் தூர்தர்ஷன் தொலைக்காட்சி நடத்திய கேள்வி-பதில் நிகழ்ச்சியை ஆனந்த் பை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது கிரேக்க புராணங்களிலிருந்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு கூட பதில் அளித்த குழந்தைகள், இந்திய இதிகாசமான இராமாயணத்திலிருந்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் கூற முடியாமல் திணறியதைக் கண்டார். ஸ்ரீ ராமனின் தாயாரின் பெயரைச் சொல்ல முடியாத குழந்தையைக் கண்ட அவர், அப்போதே அதற்கான முயற்சிகளில் ஈடுபடத் துணிந்தார்.

நல்ல ஊதியம் தரும் வேலையைக் கைவிட்டு, அமர் சித்திரக் கதா நிறுவனத்தை அதே ஆண்டில் தொடங்கினார். பிரபல நிறுவனங்கள் அவரது முயற்சிக்கு ஆதரவு தெரிவிக்கத் தயங்கிய நிலையில், இந்தியா புக் ஹவுஸ் நிறுவனத்தின் ஜி.எல்.மிர்ச்சந்தனி என்பவர் ஆனந்த் பைக்கு உதவினார்.. பாரதத்தின் பாரம்பரியம், இலக்கியங்கள், பண்பாடு, தலைவர்கள் குறித்த சித்திரக் கதைகளை இந்நிறுவனம் வெளியிட்டது. குறுகிய காலத்திலேயே நிறுவனம் புகழ் பெற்றது. நிறுவனம் வளர்ந்தபோது, சித்திரக்கதை எழுத்தாளராகவும், ஆசிரியராகவும் வெளியீட்டாளராகவும் மாறினார் ஆனந்த் பை.

வெளியீடுகள்

ராமாயணம், மகாபாரதம், பாகவதம் போன்ற கதைகள் மட்டுமல்லாது, சுதந்திரப் போராட்ட வீரர்கள், இந்திய நாட்டின் மன்னர்கள், வீரர்கள், புலவர்கள், ஆன்மிக ஞானிகள், துறவிகள், சமயச் சான்றோர்கள், தொண்டுள்ளம் படைத்த மகான்கள், அரசியல் தலைவர்கள், விஞ்ஞானிகள் குறித்த படக்கதைகளை அமர் சித்திரக் கதா நிறுவனம் வெளியிட்டது. தற்போது, 440 தலைப்புகளில் 8.6 கோடி படக்கதைப் புத்தகங்களை, இந்நிறுவனம் இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் விற்றுள்ளது. இந்த சித்திரக் கதை படித்து வளர்ந்த குழந்தைகளின் அறிவு, இந்தியப் பண்பாடு குறித்த தெளிவுடன் விசாலமானது.

1969 ல் ஆனந்த் பை நாட்டின் முதல் கேலிச்சித்திர (கார்டூன் சிண்டிகேட்) நிறுவனமான 'ரங் ரேகா பியுச்சர்ஸ்' என்ற நிறுவனத்தை நிறுவினார்; 1980 ல் 'டிவிங்கிள்' என்ற ஆங்கில குழந்தைகள் இதழைத் தொடங்கினார். இதன்மூலமாக இலட்சக் கணக்கான குழந்தைகளின் உள்ளம் கவர்ந்தார்.

கதை மாந்தர்கள்

ராமுவும் சாமுவும், கபிஷ், லிட்டில் ராஜி, பேக்ட் பேண்டசி, பன் லேண்ட் போன்ற சித்திரத் தொடர்கள் ஆனந்த் பையால் உருவாக்கப்பட்டவை. இவை பல நாளிதழ்களிலும் மாத இதழ்களிலும் வெளியாகி, மழலைகளை மகிழ்வித்தன. தமிழில் வெளியான பைக்கோ நிறுவனத்தின் 'பூந்தளிர்' மாத இதழ், அமர் சித்திரக் கதா நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துகொண்டு, இக்கதைகளை தமிழில் வெளியிட்டது. இதனைத் தமிழாக்கம் செய்தவர் வாண்டுமாமா

காணொளிகள்

'ஏகம் சத் (இறைவன் ஒருவரே)', 'வெற்றிக்கு ஏழு பாதைகள்' ஆகிய இரு காணொளிப் படங்களையும் ஆனந்த் பை ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் தயாரித்துள்ளார். குழந்தைகள் மற்றும் மாணவர்களுக்கான தன்னம்பிக்கையூட்டும் நூல்கள், ஆளுமை வளர்ப்பு நூல்களையும் பை எழுதியுள்ளார்.

சிறப்பு

தனது கார்டூன் இலக்கியப் பணிக்காக பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார் பை. இவரது வாழ்வு, இந்தியாவின் எதிர்காலத் தலைமுறைக்கு நாட்டின் பழம்பெருமையை நினைவுபடுத்தும் நோக்கத்துடன் கழிந்தது. அதே நேரம் அறிவியலின் தாக்கமும், நவீனக் கல்வியின் ஊக்கமும் பையின் சித்திரக் கதைகளுக்கு புது மெருகும் புத்திளமையும் அளித்தன. குழந்தைகளைப் பொருத்த வரை, இவர் மழலை இலக்கியம் படைத்ததால் 'பை மாமா' ஆனார்.

மறைவு

அனந்து பை பெப்ரவரி 24, 2011 இல் மறைந்தார்.

மேற்கோள்கள்

  1. The World of Amar Chitra Katha Media and the Transformation of Religion in South Asia, by Lawrence A Babb, Susan S. Wadley. Motilal Banarsidass Publ., 1998. ISBN 8120814533. Chapt. 4, p. 76-86.
  2. Thanks, Uncle Pai The Hindu, 9 Oct 2004.
  3. In India, New Life for Comic Books as TV Cartoons New York Times, 19 July 2009
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.