அனந்த பத்மநாப நாடார்

அனந்த பத்மநாப நாடார் கன்னியாகுமரி மாவட்டத்தில் வேர்கிளம்பிக்கு அருகில் உள்ள தச்சன்விளை என்ற ஊரில் பிறந்தார். இவரது காலம் கி.பி. 1698-1750 ஆகும். இவர் திருவிதாங்கூர் மன்னன் மார்த்தாண்ட வர்மா அரியணை ஏற உதவியர். மார்த்தாண்ட வர்மா ஆட்சியில் முதன்மை தளபதியாக பணியாற்றியுள்ளார். 1741-இல் குளச்சலில் நடைபெற்ற குளச்சல் சண்டையில் மார்த்தாண்டவர்மா அரசுக்கும் - டச்சுப் படைக்கும் இடையே நடைபெற்ற போரில் டச்சுக்காரர்களைத் தோற்கடித்து அவர்களின் படைத்தலைவன் டிலனாயைக் கைது செய்தார். இப்போரில் அனந்த பத்மநாப நாடார் தலைமையில் அன்றைய காலகட்டத்தில் வாழ்ந்த 108 நாடார் ஆசான்களின் துணைக் கொண்டு டச்சுப் படையினரை தோற்கடித்தார். தனது ஆட்சியைக் காப்பாற்றிய அனந்த பத்மநாபன் நாடாருக்கு, மார்த்தாண்டவர்மா ஏராளமான ஊர்களையும், விளை நிலங்களையும், ஏலாக்களையும் வழங்கியதற்கான செப்புப்பட்டயங்கள் பல உள்ளது.

குளச்சல் போரில் மார்த்தாண்ட வர்மரிடம் சரணடையும் டச்சுப்படை தளபதி டி லனாய், அருகில் அனந்த பத்மநாபன்

நினைவிடங்கள்

குளச்சல் சண்டையில் வெற்றி பெற்றதற்காக அவரை பாராட்டி அவர் பெயரில் பல நினைவிடங்களை அமைத்த மன்னன் மார்த்தாண்ட வர்மன், பல ஊர்களுக்கு அனந்த பத்மநாபனின் பெயரைச் சூட்டினார். குமரி மாவட்டத்தில் உள்ள பத்மநாபபுரம் அரண்மனையின் பெயர் இவரை கவுரவிக்கும் விதமாக சூட்டப்பட்டது. பின்னர் வந்த திருவிதாங்கூர் மன்னர்கள் வருணாசிரம கோட்பாட்டை நிலை நாட்டுவதற்காக கொண்டு வந்த தீண்டாமை, காணாமை, நடவாமை போன்ற தீட்டுகளை நாடார் மக்களின் மீது திணித்தனர். இதில் “சாணார்(நாடார்) அல்லது ஈழவ இனத்தைச் சார்ந்த ஒருவன் பிராமனிடமிருந்து 36 அடி தொலைவிற்கப்பாலும், நாயரிடமிருந்து 12 அடி தூரத்திற்கப்பாலுமே நிற்க வேண்டும் என்ற கட்டுப்பாடுகள் உருவாக்கப்பட்டது. மேலும் நாடார் பெண்கள் மார்பகத்தை திறந்து போடுவதுதான், உயர் சாதியினருக்குத் தரும் மரியாதை என்று திருவாங்கூர் நாடு ஒரு நடைமுறையை வகுத்ததின் காரணமாக நாடார்களுக்கும், நாயர்களுக்கும் இடையே பெரும் கலவரம் மூண்டது. இதில் வெற்றி பெற்ற நாயர்கள் அனந்த பத்மநாப நாடாரின் நினைவை சுமந்து கொண்டிருந்த கட்டிடங்கள் அனைத்தையும் அழித்தனர் என்பது பெரும்பாலானோர் கூற்று. பெண்கள் உயர் சாதி என்று கருதப்பட்ட மக்கள் முன் மேலாடை அணியக்கூடாது என்ற சட்டம் நடைமுறைக்கு வந்தது.

வேலு தம்பி தளவாய்

அனந்த பத்மநாப நாடாருக்கு பின் வந்த வேலுதம்பி தளவாய், நாடார் வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக இருந்தவர். அனந்த பத்மநாப நாடாருக்கு பின் திருவிதாங்கூர் ஆட்சியின் தளபதியாக பொறுப்பு வகித்த இவர் 1809 ஆம் ஆண்டில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாடார்களை வெட்டிப் படுகொலை செய்து கடலில் வீசினார். நாடார்களுக்கான வரியை இரட்டிப்பாக்கி கொடுமைப் படுத்தினார். வீரபாண்டிய கட்டபொம்மனை வீழ்த்த ஆங்கிலேயர்களுக்கு உதவி செய்தார். இவர் காலத்தில் அனந்த பத்மநாப நாடாரின் வரலாறு திரித்தல் மற்றும் நினைவிடங்கள் சிதைத்தல் நடைபெற்றது.

இராமதாஸ் அறிக்கை

ஏப்ரல் 16,2013 அன்று நாளேடுகளில் வெளியிட்ட அறிக்கையில் அனந்த பத்மநாப நாடாருக்கு தச்சன்விளையில் நினைவுச்சின்னம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் பார்க்க

ஆதாரங்கள்

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.