அதியன் விண்ணத்தனார்

அதியன் விண்ணத்தனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர்.

பெயர் விளக்கம்

சேர சோழ பாண்டியரில் சிலர் புலவர்களாகவும் விளங்கியது போலத் தகடூரை ஆண்ட அதியமான் பரம்பரையில் வந்த புலவர் இவர் ஆதலால் அதியன் என்னும் அடைமொழியுடன் இவர் குறிப்பிடப்பட்டுள்ளார். ஆவூர் மூலங்கிழாரால் பாடப்பட்ட அரசன் விண்ணத்தாயன் என்னும் என்னும் பெயரைப் பெற்றுள்ளான். (புறம் 216) விண் அத்து ஆயன் என்னும் சொற்களின் கூட்டுத்தொடரே விண்ணத்தாயன். இதில் அத்து என்பது சாரியை என்பதைத் தொலகாப்பியத்தால் உணரலாம். மண்ணில் ஆடுமாடு மேய்ப்பவர் ஆயர். விண்ணில் அனைத்தையும் மேய்க்கும் ஆயன் திருமால். இந்த வகையில் திருமாலைக் குறிக்கும் பெயர்தான் விண்ணத்தாயன் என்பது விளங்கும்.

இவரது பாடல்

இவரது பெயரில் ஒரே ஒரு பாடல் உள்ளது. அது அகம் 301 பாலை

பாடல் தரும் செய்தி

திருவிழா முடிந்த மறுநாள் பாணர்கள் தமத் இசைக்கருவிகளைக் கலப்பையில் கட்டித் தூக்கிக்கொண்டு வேறூர் சென்றுவிடுவர். அப்போது அந்த ஊர் வெறிச்சோடித் துன்பறுவது போலத் தான் துன்பறுவதாகத் தலைவி தன் தோழியிடம் சொல்கிறாள்.

உவமைகள்

இவர் தன் கருத்தை விளக்கத் தந்துள்ள உவமைகள் சுவையானவை.

  • வறண்டுபோன யாழ் நரம்பு போல் அவள் வாயிலிருந்து சொற்கள் வருகின்றனவாம்.
  • பாணர் ஏறிச்செல்லும் வண்டியின் கூடாரம்(ஆரை) முதலை கொட்டாவி விடுவது போல இருக்குமாம்.
  • மகளிர் வைத்த விளக்கு எரிவது எருக்கம்பூ போல இருக்குமாம்.
  • பாணர் பாடினியரோடு களிறும் பிடியும் உரசிக்கொண்டு செல்வது போலச் செல்வார்களாம்.
  • தண்ணீரில் இருக்கும் தவளை வானம் முழங்குவது போலத் தெவிட்டுமாம்.
  • தலைவனோடு இருந்த நாள் திருவிழா நாளாம். அவனைப் பிரிந்திருக்கும் நாள் வெற்றுநாளாம்.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.