அண்ணல் தங்கோ

கு. மு. அண்ணல் தங்கோ (12 ஏப்ரல் 1904 - 4 சனவரி 1974) என்பவர் ஒரு தனித்தமிழ் அறிஞரும், இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளரும் ஆவார்.

வாழ்க்கை

இவர் வேலூர் மாவட்டம், குடியாத்தத்தில் ஏப்ரல் 12, 1904-இல் பிறந்தார். இவருக்குப் பெற்றோர் வைத்த பெயர் ‘சுவாமி நாதன்’. தொடக்கக்கல்வி மட்டுமே படித்த இவர், தனது சுயமுயற்சியால் தமிழ் மற்றும் பலமொழிகளில் புலமை பெற்றார்

காங்கிரசில்

இவர் 1918ல் காங்கிரசில் சேர்ந்தார். 1923ல் கள்ளுக்கடை மறியல், 1925ல் வைக்கம் போராட்டம், 1927ல் சைமன் குழு எதிர்ப்பு போராட்டம், 1930ல் உப்புசத்தியாகிரகப் போராட்டம், நீல் சிலை சத்தியாகிரகம் ஆகியவற்றில் பங்கேற்று 5 முறை சிறை சென்றார்.

தென்னிந்திய நலவுரிமைச் சங்கத்தில்

1936ல் காங்கிரசில் இருந்து விலகி நீதிக்கட்சி என்று அழைக்கப்பட்ட தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தில் இணைந்தார். 1944ஆம் ஆண்டில் தென்னிந்திய நலவுரிமைச் சங்கமும் சுயமரியாதை இயக்கமும் இணைக்கப்பட்டு, திராவிடர் கழகம் உருவானபோது அதற்குத் ‘தமிழர் கழகம்’ என பெயர் சூட்டுமாறு வலியுறுத்தினார்.[1]

உலகத்தமிழ் மக்கள் தற்காப்புப் பேரவை

வேலூரில் 1937ல் உலகத் தமிழ் மக்கள் தற்காப்பு பேரவையைத் தொடங்கினார். ஆண்டுதோறும் பொங்கல் விழாவை வேலூரில் கொண்டாடினார். அதில் பல தமிழறிஞர்களையும் சான்றோர்களையும் கலந்துகொள்ள வைத்து தமிழ் உணர்வை வளர்த்தார். 1937 மற்றும் 1938ல் தமிழர் உரிமை மாநாடுகளை நடத்தினார்.

திருக்குறள் நெறி தமிழ்த்திருமணம்

1927ல் ‘திருக்குறள்’ நெறி தமிழ்த் திருமணத்தை’ அறிமுகப்படுத்தி குடியாத்தம் சிவமணி அம்மையாரை மணந்தார். இவர்களுக்கு தமிழர் தங்கோ (பிறப்பு 21-06-1944) மகன் பிறந்தார்.[2]

தமிழ் நிலம் இதழ்

1942ல் ‘தமிழ் நிலம்’ என்ற பத்திரிகையைத் தொடங்கினார்.

படைப்புகள்

நடிகர் சிவாஜிகணேசனைத் திரை உலகுக்கு அறிமுகப்படுத்திய ‘பராசக்தி’ படத்திலும், ‘பெற்றமனம்’, பசியின் கொடுமை’, கோமதியின் காதலன்’ ஆகிய திரைப்படங்களிலும் பாடல் எழுதி இருக்கிறார். தமிழ் மொழியின் சிறப்பை வளர்க்கும் வகையில் பல நூல்களை எழுதியுள்ளார். அவற்றுள் சில:

  1. தமிழ்மகள் தந்த செய்தி அல்லது சிறையில் நான் கண்ட கனவு (1944) [3]

மறைவு

வாழ்நாள் முழுவதும் திருக்குறள் நெறியைப் பரப்பவும் தனித்தமிழை வளர்க்கவும் பாடுபட்ட கு.மு.அண்ணல்தங்கோ சனவரி 4, 1974ல் தேதி இறந்தார்.

நாட்டுடமையாக்கம்

கு.மு.அண்ணல்தங்கோவை கவுரவிக்கும் வகையில் அவருடைய படைப்புக்களை நாட்டுடமை ஆக்கினார் முதல்வர் கருணாநிதி.

மேற்கோள்கள்

  1. செ.அருள்செல்வன் (2017 ஏப்ரல் 13). "அண்ணல் தங்கோ எனும் ஆளுமை!". கட்டுரை. தி இந்து. பார்த்த நாள் 13 ஏப்ரல் 2017.
  2. குடிஅரசு, 1-7-1944, பக்.11
  3. குடிஅரசு, 16-9-1944, பக்9
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.