அகில இலங்கை சைவக்குருமார் அர்ச்சகர் சபை
சைவக்குருமார்கள் அனைவரும் நிறுவனரீதியாக ஒன்றிணைந்து செயற்பட்டு சைவசமய வளர்ச்சிக்கும் சைவக்குருமார்களின் வளர்ச்சிக்கும் உதவும் நோக்கில் யாழ்ப்பாண நகரத்திற்கு வடக்கே அமைந்துள்ள மயிலிட்டிதெற்கு தெல்லிப்பழை எனும் இடத்தில் கட்டுவன் “குருமணி” சிவஸ்ரீ க. சிவபாதசுந்தரக்குருக்கள் அவர்களின் பெருமுயற்சியால் 1971ம் ஆண்டில் உருவாக்கப்பட்டது.
தோற்றம்
சிவாகமங்களில் கூறப்பட்ட முறைப்படி ஆலயக் கிரியைகளைத் திறம்பட நடாத்தி வந்த கட்டுவன் சிவஸ்ரீ க. சிவபாதசுந்தரக்குருக்களின் பெருமுயற்சியினால் மயிலிட்டி தெற்கு தெல்லிப்பழை கட்டுவன் ஸ்ரீஞானவைரவர் ஆலய மண்டபத்தில் 1971ம் ஆண்டு யூன் மாதம் 15ஆம் திகதி சைவக்குருமார்கள் பலர் ஒன்றுகூடி அகில இலங்கை சைவக்குருமார் அர்ச்சகர் சபையை ஆரம்பித்தார்கள். அவ்வேளை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தலைவராக திருநெல்வேலி சிவஸ்ரீ க. சிவலோகநாதக்குருக்கள் அவர்களும் செயலாளராக கட்டுவன் சிவஸ்ரீ க. சிவபாதசுந்தரக்குருக்கள் அவர்களும் பொருளாளராக நெல்லண்டை சிவஸ்ரீ வ. வே. நவரத்தினக்குருக்கள் அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டு சபையின் பணிகள் தொடரப்பட்டன.
வெள்ளி விழா
சபையின் வெள்ளி விழா 1997.11.13 அன்று நாயன்மார்கட்டு அரசடிப்பிள்ளையார் ஆலயத்தில் மிகச்சிறப்பாகவும் கோலாகலமாகவும் கொண்டாடப்பட்டது.
ஸ்தாபகர்கள் கெளரவிப்பு
வெள்ளி விழாவின் ஓர் அங்கமாக சபையின் ஸ்தாபகர்களை கெளரவிக்கும் முகமாக சபையின் உயர்விருதாகிய "சைவாகம கிரியா சிரோமணி" எனும் விருது தேகாந்த நிலையில் தலைவர் சிவஸ்ரீ க. சிவலோகநாதக்குருக்கள், செயலாளர் சிவஸ்ரீ க. சிவபாதசுந்தரக்குருக்கள், பொருளாளர் சிவஸ்ரீ வ. வே. நவரத்தினக்குருக்கள் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
சைவ ஆகம கிரியை சம்பந்தமான கண்காட்சி
வெள்ளிவிழா நிகழ்வுகளில் ஒன்றாக சைவாகம கிரியை சம்பந்தமான கண்காட்சி ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டு வெள்ளிவிழா நாளிலிருந்து தொடர்ந்து 5 தினங்கள் நடைபெற்றது.
நூல் வெளியீடு
வெள்ளிவிழா சிறப்பு வெளியீடாக விநாயகர் விரதம், அபரக்கிரியை விளக்கம் 2ம் பதிப்பு ஆகிய நூல்கள் வெளியிப்பட்டன.
சபையால் வெளியிடப்பட்ட நூல்கள்
- மஹாகும்பாபிஷேக தத்துவங்கள்
- மஹோற்சவகாலத் தமிழ்வேதத் திருமுறைத்திரட்டு - 1982
- முத்திராலட்சண விதி - 1982
- விவாகக் கிரியை விளக்கம் - 1982
- நவக்கிரக ஸ்தோத்தரங்கள் - 2001
- சூர்ய, சனீஸ்வர சகஸ்ர நாமங்கள் - 2001
- அபரக்கிரியை விளக்கம் 1ம் பதிப்பு -
- அபரக்கிரியை விளக்கம் 2ம் பதிப்பு - 1997
- திருவிளக்கு வழிபாடு
- நித்திய கரும விதி
- ஐயப்பசுவாமி பஜனைப் பாடல்கள்