அகமது யாசின்
ஷேக் அகமது இஸ்மாயில் யாசின் (Sheikh Ahmed Ismail Hassan Yassin, 1937 – மார்ச் 22, 2004) ஹமாஸ் எனும் இஸ்லாமிய இராணுவ இயக்கத்தினையும், ஹமாஸ் கட்சியையும் தோற்றுவித்தவர். இவ்வியக்கம் தற்கொலைப் படை மற்றும் எறிகணைத் தாக்குதல்களை இசுரேலியர்களுக்கு எதிராக தொடுத்துள்ளது. இதனால் உலகின் சில நாடுகள் இதனைத் தீவிரவாத இயக்கம் என அறிவித்துள்ளன. இவ்வியக்கம் பாலஸ்தீனத்தில் மருத்துவமனைகள், கல்விக்கூடங்கள், நூலகங்கள் மற்றும் பிற நல்ல செயல்களை செய்துள்ளதுடன் காசா கரை பகுதியை ஆளுகின்றது. இவ்வியக்கமும் ஷேக் அஹ்மத் யாசினும் காசா கரையில் ஆதரவு பெற்றுள்ளனர்.
அகமது யாசின் | |
---|---|
அகமது யாசின், 2004 | |
பிறப்பு | 1937 அல்-ஜூரா, பாலஸ்தீனம் |
இறப்பு | மார்ச் 22, 2004 காசா, காசா கரை |
அகமது யாசின், 12 வயதில் தனது நண்பருடன் மல்யுத்த விளையாட்டின் போது ஏற்பட்ட விபத்தினைத்தொடர்ந்து இவருக்கு எழுந்து நடக்கவோ, கைகளைத் தூக்கவோ இயலாது. பார்வை குறைபாடும் உடையவர். 12 வயது முதல் சக்கர நாற்காலி உதவியுடன் வாழ்ந்தார். மார்ச் 22, 2004 அன்று விடியற் காலை தொழுகைக்காக செல்லும் வழியில் இவரை இஸ்ரேலிய இராணுவம் ஹெலிகாப்டர் மூலம் தாக்குதல் நடத்திக் கொன்றது. இந்தத் தாக்குதலில் இவருடன் இருந்த பன்னிரெண்டு பேரும் இறந்தனர். இவர் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலை தொடர்ந்து பல்வேறு நாடுகளும் ஐக்கிய நாடுகள் சபையும் இஸ்ரேல் மீது கண்டனம் தெரிவித்தது. இவருடைய இறுதி சடங்கில் இரண்டு இலட்சம் பாலஸ்தீனியர்கள் கலந்து கொண்டனர்.
ஆரம்ப வாழ்க்கை
தற்பொழுது இஸ்ரேலிய நாட்டில் உள்ள அசுகெலான் நகருக்கு அருகில் உள்ள அல்-ஜுரா எனும் கிராமத்தில் அஹ்மத் யாசின் பிறந்தார். இவர் பிறக்கும் பொழுது அப்பகுதி ஆங்கிலேயரின் கட்டுப்பாட்டில் இருந்தது. இவரது பாலஸ்தீனிய பாஸ்போர்டில் ஜனவரி 1, 1929 என்று இவரது பிறந்த நாள் உள்ளது ஆனால் தாம் 1938ஆம் ஆண்டு பிறந்ததாக தெரிவித்து உள்ளார். இவரது தந்தை அப்துல்லாஹ் யாசின் தாயார் சஹதா அல்- ஹபீல் ஆவர். அஹ்மத் யாசினுக்கு மூன்று வயதானபோது தந்தை இறந்துவிட தன்னுடைய நான்கு சகோதரர்கள், இரண்டு சகோதரிகளுடன் சேர்ந்து காசாவிற்கு பயணப்பட்டனர். அந்நேரம் அரேபிய - இஸ்ரேலிய போர் நடந்ததால் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினரால் அகமது யாசினின் குடும்பம் அல்-ஷாட்டி அகதிகள் முகாமில் அடைக்கப்பட்டனர்.
அவருக்கு பன்னிரெண்டு வயது இருக்கும்பொழுது தன் நண்பர் அப்துல்லாஹ் அல்-கதிபுடன் மல்யுத்தம் செய்ததில் இவருடைய கழுத்து பகுதியில் அடிபட்டு நாட்கள் கட்டு போட்டு இருந்தார். அந்த கட்டினை பிரித்த அன்றைய நாள் முதல் உடல் செயல்பாடு இல்லாமல் வாழ்ந்தார். நண்பனுடன் ஏற்பட்ட சண்டையில் அவருடைய தண்டுவடம் பாதிக்கப்பட்டு எழுந்து நடக்கவோ ஒரு பொருளை தூக்கவோ முடியாமல் போனது அவருக்கு. யாசின், கைரோ, எகிப்தில் உள்ள அல்-அசார் பல்கலை கழகத்தில் சேர்ந்து படிப்பினை தொடர்ந்தார் ஆனால் அவருடைய இயலாமையால் அங்கே அவரால் தொடர்ந்து கல்வி பெற முடியவில்லை. ஆனாலும் வீட்டில் இருந்தபடியே அரசியல், சமூகவியல், பொருளாதாரம், தத்துவம் மற்றும் இஸ்லாமிய மார்க்க நூல்களையும் கற்றார். தமது 22 ஆம் வயதில் ஹலிமா யாசின் எனும் உறவினரை மணந்து கொண்டார். இவர்களுக்கு 11 பிள்ளைகள் உள்ளனர்.