அகச்சிவப்பு வானியல்

அகச்சிவப்பு வானியல் சிவப்பு ஒளியிலும் கூடிய அலைநீளம் கொண்ட அகச் சிவப்புக் கதிர்களைக் கண்டறிவது தொடர்பானது. கண்ணுக்குப் புலனாகக் கூடிய அலைநீளங்களுக்கு அண்மையாக உள்ள அலைநீளங்களோடு கூடிய கதிர்களைத் தவிர, பெரும்பான்மையான அகச் சிவப்புக் கதிர்கள் வளிமண்டலத்தினால் உறிஞ்சப்படுகின்றன. வளிமண்டலமும் குறிப்பிடத்தக்க அளவில் அகச்சிவப்புக் கதிர்வீச்சை வெளிவிடுகின்றது. இதனால், அகச்சிவப்புக் நோக்கிகள் உயரமானதும் உலர்வானதுமான இடத்தில் அல்லது வளிமண்டலத்துக்கு வெளியே விண்வெளியில் இருத்தல் வேண்டும். அகச்சிவப்புக் கதிர்கள் கண்ணுக்குப் புலனாகும் ஒளியை வெளிவிட முடியாத அளவுக்குக் குளிர்ச்சியான பொருள்களை ஆராய்வதற்கு உதவுகின்றன. அகச்சிவப்புக் கதிர்களின் கூடிய அலைநீளம், அவை காணக்கூடிய ஒளியைத் தடுத்துவிடக் கூடிய முகில்களையும், தூசிப் படலங்களையும் ஊடுருவக் கூடியன ஆதலால், மூலக்கூற்று முகில்களுக்குள் இருக்கும் இளம் விண்மீன்கள் அல்லது கலக்சிகளின் மையப்பகுதிகளில் இருக்கும் விண்மீன்களை ஆய்வு செய்ய உதவுகிறது.

அகச் சிவப்புக் கதிர்களைப் பெற்றுக்கொள்வதற்கு ஏற்றதாக்கப்பட்ட தொலைநோக்கிகளே இதற்குப் பயன்படும் முக்கிய கருவிகளாகும். வளிமண்டலத்தில் ஏற்படும் மின்காந்த இடையீடுகளைத் தவிர்ப்பதற்காக விண்வெளித் தொலை நோக்கிகளும் இதற்குப் பயன்படுத்தப்படுகின்றன.[1]

மேற்கோள்கள்

  1. Staff (11 September 2003). "Why infrared astronomy is a hot topic". ESA. Archived from the original on 30 July 2012. http://www.esa.int/esaCP/SEMX9PZO4HD_FeatureWeek_0.html. பார்த்த நாள்: 11 August 2008.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.