யாழ்ப்பாணத்தில் ஒல்லாந்தர் ஆட்சி

யாழ்ப்பாணத்தில் ஒல்லாந்தர் ஆட்சி 1658 தொடக்கம் 1796இல் பிரித்தானியரிடம் பறிகொடுக்கும் வரை நடைபெற்றுவந்தது. 1658 ஆம் ஆண்டு யாழ்ப்பாணப் பகுதியை ஆண்டுவந்த போத்துக்கீசரிடமிருந்து ஒல்லாந்தர் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றினர். யாழ்ப்பாணம் 138 ஆண்டு காலம் ஒல்லாந்தரிடம் இருந்தது. இப்பொழுது சிதைந்த நிலையிலுள்ள யாழ்ப்பாணக் கோட்டை ஒல்லாந்தரால் கட்டப்பட்டதாகும். போர்த்துக்கேயரின் சதுர வடிவக் கோட்டையை இடித்துவிட்டு ஐங்கோண வடிவில் யாழ்ப்பாணக் கோட்டையை ஒல்லாந்தர் கட்டினர்.

பின்னணி

16 ஆம் நூற்றாண்டில் இந்துப் பெருங்கடற் பகுதியில் ஐரோப்பியரான போர்த்துக்கேயரின் செல்வாக்கு வளர்ச்சி பெற்றிருந்தது. வணிக நோக்கங்களுக்காக இப்பகுதிக்கு வந்த அவர்கள் இப்பகுதியில் இருந்த பல நாடுகளின் நிலப்பகுதிகளைக் கைப்பற்றி போர்த்துக்கேய மன்னரின் ஆட்சியின்கீழ் கொண்டுவந்தனர். யாழ்ப்பாண அரசு உட்பட்ட இலங்கையின் கரையோரப் பகுதிகளும் இவ்வாறு போர்த்துக்கேயரின் ஆட்சியின்கீழ் இருந்தன. அக்காலத்தில், பிறநாடுகளில் ஆதிக்கம் செலுத்திய கடல் வல்லரசுகளாக போர்த்துக்கலும், எசுப்பானியாவும் விளங்கின. பாப்பாண்டவரின் உதவியுடன் உருவான ஒப்பந்தமொன்றின்படி கத்தோலிக்க நாடுகளான போர்த்துக்கலும், எசுப்பானியாவும் உலக நாடுகளில் ஆதிக்கம் செலுத்தும் உரிமையைத் தமக்குள் பங்குபோட்டிருந்தன. இதனால் எசுப்பானியாவின் தலையீடு இன்றி இந்துப் பெருங்கடற் பகுதியில் போர்த்துக்கேயரால் ஆதிக்கம் செலுத்த முடிந்தது.[1]

17 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய நாடுகளான இங்கிலாந்து, ஒல்லாந்து, பிரான்சு ஆகிய நாடுகள் வல்லரசுகளாக எழுச்சிபெற்றுவந்தன. இந்நாடுகள் கிறித்தவத்தின் கத்தோலிக்கப் பிரிவுக்கு எதிரான புரொட்டசுத்தாந்தப் பிரிவை ஆதரித்தமையால் பாப்பாண்டவரின் கட்டளைக்குக் கீழ்ப்படியவில்லை. தொலைதூர வணிகத்துக்கான நிறுவனங்களை உருவாக்கிய இந்நாடுகள், இந்துப் பெருங்கடற் பகுதியிலும் தமது ஆதிக்கத்தை ஏற்படுத்தப் போட்டியிட்டன. இங்கிலாந்தும், ஒல்லாந்தும் இப்போட்டியில் பெருமளவு வெற்றிகண்டன.[2] பத்தேவியா போன்ற இடங்களிலிருந்து போர்த்துக்கேயரை வெளியேற்றிய ஒல்லாந்தர். இலங்கையிலிருந்தும் போர்த்துக்கேயரை விரட்டிவிட்டுத் தமது ஆட்சியை ஏற்படுத்தினர். யாழ்ப்பாணம் 1958ல் ஒல்லாந்தர் வசமானது.

நிர்வாகம்

யாழ்ப்பாண அரசைக் கைப்பற்றிய போர்த்துக்கேயர் அதைத் தனியான அலகாகவே நிர்வாகம் செய்தது போலவே, ஒல்லாந்தரும் யாழ்ப்பாண அரசுக்கு உட்பட்டிருந்த பகுதிகளைத் தனியாகவே நிர்வாகம் செய்தனர். இலங்கைத் தீவில் அமைந்திருந்த ஒல்லாந்தரின் ஆட்சிப் பகுதிகள் கொழும்பு, காலி, யாழ்ப்பாணம் என மூன்று பகுதிகளாக இருந்தன. இலங்கையிலிருந்த எல்லா ஒல்லாந்த ஆட்சிப் பகுதிகளும், பத்தேவியாவில் இருந்து செயற்பட்ட ஒல்லாந்தக் கிழக்கிந்தியக் கம்பனியின் அதிகார பீடத்தினால் நியமிக்கப்பட்டு அதன் கீழ் இயங்கிய ஒரு தேசாதிபதியையும், மூத்த அலுவலர்களையும் உள்ளடக்கிய ஒரு சபையினால் நிர்வகிக்கப்பட்டது. இதன் தலைமையிடம் கொழும்பில் இருந்தது. யாழ்ப்பாணத்தின் படைத்துறை மற்றும் நிர்வாக அலுவல்களுக்குப் பொறுப்பாக ஒரு தளபதி நியமிக்கப்பட்டிருந்தார். இத் தளபதியின் கீழ் நிர்வாக அலுவல்களுக்குப் பொறுப்பாக திசாவை எனப்படும் அலுவலர்களும் அவர்களுக்குக் கீழ் துணைத் திசாவைகளும் இருந்தனர். இவர்கள் தவிர மேலும் பல உயர் அலுவலர்கள் தளபதியின் கீழ் பணியாற்றினர்.

திசாவை போன்ற உயர் பதவிகள் ஐரோப்பியருக்கே வழங்கப்பட்டன எனினும், முதலியார், விதானை போன்ற குடிசார் நிர்வாகப் பதவிகள் உள்ளூர் மக்களுக்கு வழங்கப்பட்டன. தொடக்கத்தில், போர்த்துக்கேயரின் கீழ் பணியாற்றியவர்களும் பணிகளில் தொடர அனுமதிக்கப்பட்டனர்.

மேற்கோள்கள்

  1. குணசிங்கம், முருகர்., பக். 121, 122.
  2. குணசிங்கம், முருகர்., பக். 121, 122.

உசாத்துணைகள்

  • குணசிங்கம், முருகர்., இலங்கையில் தமிழர் ஒரு முழுமையான வரலாறு (கிமு 300 - கிபி 2000), எம். வி. வெளியீடு, தென்னாசியவியல் மையம், சிட்னி, 2008.

இவற்றையும் பார்க்கவும்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.