மாநில சட்டப்பேரவைத் தலைவர்

மாநில சட்டப்பேரவைத் தலைவர் என்பவர் இந்திய மாநிலங்களில் செயல்படும் சட்டமன்றக் கூட்டத்திற்குத் தலைமைப் பொறுப்பை ஏற்பவர் ஆவார்.


தேர்வு செய்யப்படும் முறை

இந்தியாவில் இருக்கும் ஒவ்வொரு மாநில அரசின் சட்டமன்றத்திற்கும் மாநிலத் தேர்தல் ஆணையத்தால் நடத்தப்பட்ட சட்டமன்றத் தேர்தலில் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களில் இருந்து சட்டப்பேரவைத் தலைவர் ஒருவர் தேர்வு செய்யப்படுகிறார்.

இந்த்த் தேர்தலை மாநிலத் தேர்தல் ஆணையம் நடத்துகிறது. அரசியல் கட்சி சார்பாகவோ அல்லது கூட்டணி சார்பாகவோ அல்லது கட்சி சாராத சுயேட்சையாகவோ வேட்பாளர்கள் நிறுத்தப்படுகிறார்கள். பெரும்பான்மையான சட்டமன்ற உறுப்பினர்களின் வாக்குகள் பெற்ற வேட்பாளர் தலைவராக தேர்வு செய்யப்படுகிறார்.


பொறுப்புகள்

இவர் சட்டமன்றக் கூட்டத்திற்குத் தலைமைப் பொறுப்பை ஏற்றிருப்பதுடன் கூட்டங்களின் போது உறுப்பினர்களால் தெரிவிக்கப்படும் கருத்துக்களை பதிவேடுகளில் சேர்க்கவும் தேவையற்ற கருத்துக்களை நீக்கவும் அதிகாரம் பெற்றவராக இருக்கிறார். பேரவையை வழி நடத்துவதுடன் விவாதங்களையும் நெறிப்படுத்துவார். உறுப்பினர்கள் பேசுவதற்கான வாய்ப்பை வழங்கும் அதிகாரம் உடையவர்.


சட்டமன்ற உறுப்பினர்களுக்குப் பதவிப் பிரமாணம் செய்துவைப்பார்.


உறுப்பினர்கள் மீது கொண்டு வரப்படும் புகார்களின் அடிப்படையில் உறுப்பினர்களை தற்காலிகமாகவோ அல்லது கூட்டத் தொடர் முழுமைக்குமோ கலந்து கொள்ளத் தடைவிதிக்கும் அதிகாரமுடையவராகவும் இருக்கிறார்.


விவாதங்கள் மற்றும் மசோதாக்கள் மீது வாக்கெடுப்பு நடத்துவதுடன் முடிவுகளையும் அறிவிப்பார். வாக்கெடுப்பில் எவருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் வாக்குகள் சம நிலையில் இருக்கும்பட்சத்தில் இவர் தனது வாக்கைப் பதிவு செய்யும் உரிமை கொண்டவர்.


நடுநிலைமை

அரசியல் கட்சி சார்பாகப் போட்டியிட்டு வெற்றிபெற்று சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த போதிலும் சட்டமன்றத்திலும், வெளியிடங்களிலும் பதவிக்காலம் முடியும் வரை கட்சி சார்பற்றவராகவே நடந்து கொள்ளவேண்டும் என்கிற விதிமுறையையும் இவர் கடைப்பிடிக்க வேண்டியிருக்கிறது.


தமிழகச் சட்டப்பேரவைத் தலைவர்

தற்போதைய தமிழகச் சட்டப்பேரவைத் தலைவராக ப. தனபால் செயல்படுகிறார்.

பேரவைத் தலைவராக பணியாற்றியவர்கள் [1]

  1. ஜெ.சிவசண்முக பிள்ளை, என்.கோபால மேனன் (1952-1957),
  2. கிருஷ்ணராவ் (1957-1962),
  3. எஸ்.செல்லபாண்டியன் (1962-1967),
  4. சி. பா. ஆதித்தனார், புலவர் கே. கோவிந்தன் (1967-1971),
  5. கே. ஏ. மதியழகன், புலவர் கே. கோவிந்தன் (1971-1976),
  6. முனுஆதி (1977-1980),
  7. கே. ராஜாராம் (1980-1984),
  8. பி. எச். பாண்டியன் (1985-1988),
  9. தமிழ்குடிமகன் (1989-1991),
  10. ஆர். முத்தையா (1991-1996),
  11. பி. டி. ஆர். பழனிவேல்ராசன் (1996-2001),
  12. கா. காளிமுத்து (2001-2006),
  13. ஆர். ஆவுடையப்பன் (2006-2011),
  14. டி. ஜெயக்குமார் (2011 மே முதல் 2012 செப்டம்பர் 29 வரை)
  15. ப. தனபால் (2012 அக்டோபர் முதல் )

வெளி இணைப்புகள்

சான்று

  1. தினமணி செய்தி
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.