பெருமூங்கில்

வெதிரம் [Dendrocalamus giganteus] என்பது பெருமூங்கில்.
வேரல் என்பது சிறுமூங்கில்.
பெருமூங்கில் பந்தல்கால் நடப் பயன்படும்.
சிறுமூங்கில் கிழித்துப் கூடை முடையப் பயன்படும். சிறுமூங்கிலை ஊன்றுகோலாகவும் பயன்படுத்துவர்.

பெருமூங்கில்
பெருமூங்கில்
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: பூக்கும் தாவரம்
தரப்படுத்தப்படாத: ஒருவித்திலையி
தரப்படுத்தப்படாத: Commelinids
வரிசை: Poales
குடும்பம்: Poaceae
பேரினம்: Dendrocalamus
இருசொற் பெயரீடு
Dendrocalamus giganteus
Munro

வெதிர், வெதிரம், அமை [1] கழை [2] என்னும் சொற்கள் ஒரே புல்லினப் பெருமூங்கில் மரத்தைக் குறிப்பவை. இத்தாவரங்கள் வெப்பமண்டலம் மற்றும் மிதவெப்ப மண்டல பகுதிகளில் அதிகமாக பரவி உள்ளன. இது மூங்கில் குடும்ப உலகத்தில் அதிக எண்ணிக்கை உள்ள சிற்றினமாகும். இது கொத்தாக புதர் போன்று காணப்படும். இதன் தாயகம் தென்கிழக்கு ஆசியாவாகும்.

இதன் தண்டு உயரமானது. நீண்ட கணுவிடைப் பகுதியை கொண்டது. கணுவிடைப் பகுதி மென்மையானது கணுப்பகுதி கடினமானது. கொத்தான புதர் செடியாக வளரும். பச்சை – சாம்பல் வண்ணம் கொண்டது. ஒவ்வொரு தண்டும் கொத்தாக நெருக்கமாக புதர் போன்று தனித்தனியாக வளரும். இது 30 மீட்டர் உயரம் வரை வளரும் ( 98 அடி ) இந்தியாவில் அருணாசலப் பிரதேசத்தில் வளரும் மூங்கில் 42 மீட்டர் ( 13.7 – 9 அடி ) சாதகமான சூழ்நிலையில் ஒரு நாளைக்கு 40 செ.மீ வரை வளரும். இது குறைந்த மற்றும் உயரமான மலைப்பகுதிகளிலும், பொதுவாக ஆற்றங்கரை ஒரம் மற்றும் வீட்டுத் தோட்டத்தில் வளர்கின்றன. இத்தாவரம் வங்களதேசம், இந்தியா, இலங்கை மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகளான இந்தோனேசியா, மியான்மர் மற்றும் தாய்லாந்து பகுதிகளில் காணப்படுகிறது.

கணுக்கள் உள்ள தண்டு நேராக வளரும். இத்தண்டு சாம்பல் நிற பச்சை வண்ணம் கொண்டது. மேற்புறத்தில் சாம்பல் துகள்கள் ஒட்டியது போன்ற தோற்றம் கொண்டது, பின்னர் காயும் போது பழுப்பு பச்சை நிறமாக வழவழப்பாக மாறுகிறது. இளம் தண்டு கருப்பு ஊதா நிறம் கொண்டது. கணுவிடைப்பகுதி நீளம் 25 – 40 செ.மீ, சுற்றளவு 10 – 35 செ.மீ உள்ளது. தண்டுப்பகுதி மெல்லியதாகவும் நுனியில் மட்டும் கிளைத்திருக்கும். தொங்கும் வேர்கள் 8 வது கணுப்பகுதி வரை உள்ளது. தண்டின் அடிப்பகுதியில் உள்ள வேர்கள் பருத்து ரைசோம் போன்று தரையில் ஒட்டி உள்ளது. 

கணுக்களை கொண்ட தண்டுப்பகுதியை சுற்றி குழாய் வடிவ இலை அடி உறை சுற்றியுள்ளது. இளம் பருவத்தில் பச்சை நிறத்திலும் காய்ந்த பிறகு பழுப்பு நிறமாக மாறுகிறது. குழாய் வடிவ இலை அகன்ற பெரிய இலையடியை கொண்டது. இதன் நீளம் 24 – 30 செ.மீ அகலம் 40 – 60 செ.மீ கொண்டது. இலைத்தாள் முக்கோண வடிவம் (அ) ஈட்டி வ் வடிவத்தினால் ஆனது. 7 – 10 செ.மீ நீளம் கொண்டது. மேற்பகுதியில் உள்ள இலைப்பகுதி சுருண்டு வட்டமாக உள்ளது. அதன் கீழ் பகுதி கணுக்களில் காதுமடல் போன்ற சிறிய இலையானது (லிக்யூல்) சம அளவு கொண்ட வட்ட வடிவத்தில் சுருளாக உள்ளது. இலையின் மேற்பகுதியில் தங்க மற்றும் பழுப்புநிற தூவிக:ள் காணப்படுகிறது. கீழ் புறப் பகுதி தூவிகள் இல்லாமல் வழவழப்பாக உள்ளது. இத் தாவரம் வளர வளர இலைப்பகுதிகள் உதிர்ந்து விடுகிறது.

பயன்பாடு

இந்தியாவில் மூங்கில் பாலங்கள் கட்டுவதற்கும் வீட்டுச் சுவர்களுக்கு மாற்றாக தூண்களாகவும் பயன்படுகிறது. மேலும் சிமெண்ட் கான்கீரிட் போடுவதற்கான தாங்கி, ஏணி, மேடைகள் அமைத்தல், மற்றும் ஓடாகவும் தரை விரிப்பாகவும் பயன்படுகிறது. இதன் இலைகள் கூரை வேயப் பயன்படுகிறது.


சில சங்கப்பாடல் குறிப்புகள்
  • வெதிர நுனியிலிலிருந்து குரங்குக்குட்டி தாவும்போது மீன்தூண்டில் மூங்கில் கம்பு வளைந்து நிமிர்வது போல இருக்கும்.[3]
  • வெதிரம் காற்றில் உரசும்போது கந்தில் கட்டப்பட்டிருக்கும் யானை கொட்டாவி விடுவது போன்ற ஒலி வரும்.[4]
  • 'மூங்கில் இலை மேலே தூங்கும் பனி நீரே' என்னும் ஏற்றப்பாட்டின் சங்ககாலப் பாடல் அடிகள்.[5]
பயன்
  • இதன் நுனி புல்லாங்குழல் செய்ய உதவும்.[6]
  • அளக்க உதவும் உழக்கு செய்யப் பயன்படும்.[7]
  • தட்டை என்னும் இசைக்கருவி செய்யப் பயன்படும்.[8]
வயலில் நெல் விளையும் வெதிர்
  • வெதிரை வளைத்துக்கட்டி வளையல் செய்துகொள்வர்.[9]
  • வயலில் விளைவது வெதிர்நெல்.[10] இதனை இக்காலத்தில் கார்நெல் என்றும், கொட்டைநெல் என்றும் கூறுவர்.

அடிக்குறிப்பு

  1. வெதிர் நீடமை - குறிந்தொகை 385,
  2. வெதிர் அம் கழை – அகம் 298-8
  3. சிலம்பின் வெதிரத்துக் கண்விடு கழைக்கோல் குரங்கின் வன்பறழ் பாய்ந்து என இலஞ்சி மீன் எறி தூண்டில் நிவக்கும் - ஐங்குறுநூறு 278
  4. வேர் பிணி வெதிரத்துக் கால் பொரு நரல் இசை கந்துபிணி யானை அயா உயிர்த்து அன்ன – நற்றிணை 62-1
  5. கண்ணீர் நோன்கழை துயல்வரும் வெதிரத்து வான் பெயத் தூங்கிய சிதரினும் பலவே – புறநானூறு 277-5
  6. வெதிர்த் தீங்குழல் – அகம் 399-12
  7. வெதிர் உழக்கு நாழி – கலித்தொகை 76-27
  8. வெதிர் புனைத் தட்டையேன் - நற்றிணை 147-8
  9. பழன வெதிரின் கொடிப் பிணையளள் – ஐங்குறுநூறு 91
  10. வெதிர்படு வெண்ணெல் - 267-11
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.