கருவூர்க் கந்தப்பிள்ளைச் சாத்தனார்

கருவூர்க் கந்தப்பிள்ளைச் சாத்தனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். கருவூரில் வாழ்ந்தவர். இந்தக் கருவூர் இக்காலத்தில் கரூர் என மருவி வழங்குகிறது.
சங்கநூல் தொகுப்பில் இவரது பாடல்கள் மூன்று உள்ளன. புறநானூறு 168, நற்றிணை 343 ஆகிய பாடல்களைப் பாடிய புலவர் பெயர் கருவூர்க் கதப்பிள்ளைச் சாத்தனார் என்றும், அகநானூறு 309 ஆம் பாடல்களைப் பாடிய புலவரின் பெயர் கருவூர்க் கந்தப்பிள்ளைச் சாத்தனார் என்றும் நூல்கள் குறிப்பிடுகின்றன. வையாபுரிப்பிள்ளை தொகுத்த சங்க இலக்கியம் (பாட்டும் தொகையும்) என்னும் நூல் கதப்பிளை, கந்தப்பிள்ளை ஆகிய இருவரும் ஒருவரே என அறிஞர் கழகம் அறிந்து வழங்கிய கருத்தினை ஏற்றுக்கொண்டு இந்த மூன்று பாடல்களையும் பாடிய புலவர் கதப்பிள்ளை என்றே குறிப்பிட்டுள்ளார்.[1]
கதம் என்னும் சொல் சினத்தைக் குறிக்கும் [2]. சாத்தனார் என்னும் பெயர் கொண்ட இவர் சினம் மிக்கவராய் விளங்கியதால் இவ்வாறு குறிப்பிடப்பட்டிருக்கலாம்.
இவரது பாடல்கள் சொல்லும் செய்திகள் இவை:

பிட்டங்கொற்றனைப் பாடியது
இந்தக் கொற்றன் குதிரைமலை நாட்டை ஆண்டுவந்தான். சிறந்த வள்ளல். வில்லோர் பெரும எனப் புலவர் விளித்தலால் இவனது நாட்டுமக்கள் வில்லாண்மையில் சிறந்தவர் எனத் தெரியவருகிறது. இவர்களூம் விருந்தினரைப் பேணுவதில் தலைசிறந்து விளங்கினார்களாம். காந்தள் கிழங்குக்காகப் பன்றி உழுத புழுதியில் விதைத்துப் பெற்ற தினையரிசிச் சோற்றில் மரையானில் கறந்த பாலை ஊற்றிப் பொங்கி வாழையிலையில் விருந்தினர்களுக்குப் படைப்பார்களாம்.[3]
கடவுள் ஆலம்
ஆலமரத்தடிக் கடவுறுக்கு (சிவனுக்கு)ப் படைத்த சோற்றை உண்ட காக்கை மாலைப்பொழுதில் அத்திமரக் கிளையில் வந்தடையும் நிகழ்வு தலைவன் பிரிந்துசென்ற வழியில் இல்லையோ? இருந்தால் நம் இல்லம் நினைந்து வந்திருப்பாரே என்று சொல்லித் தலைவி வருந்துகிறாள்.[4]
கோடியர் வானவனிடம் பரிசில் பெறச் செல்வது போல
தலைவன் பொருள் தேடச் சென்றான். வேப்ப மரத்தடிக் கடவுளுக்குக் குருதியில் பிணைந்த சோற்று உருண்டையைத் தூவுவது போல இலவம்பூ பூத்துக்கிடக்கும் வழியில் சென்றான். படார் என்னும் பொறியைக் கண்டு யானை வெருண்டோடும் வழியில் சென்றார். என்ன நேருமோ என எனத் தலைவனை எண்ணித் தலிவி கலங்குகிறாள்.[5]

அடிக்குறிப்பு

  1. வையாபுரிப்பிள்ளை, தொகுப்பாசிரியர், அறிஞர் கழகம் ஆய்ந்து வழங்கிய அரிய பதிப்பு, பாரி நிலையம் சென்னை வெளியீடு, இரண்டாம்பதிப்பு 1967
  2. காரி கதனஞ்சான் பாய்ந்தானைக் காமுறுமிவ் வேரி மலர்க் கோதையாள்; (சிலப்பதிகாரம், ஆய்ச்சியர் குரவை) கதம் = கதன்
  3. புறநானூறு 168
  4. நற்றிணை 343
  5. அகநானூறு 309
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.