அரசு அருங்காட்சியகம், லக்னோ

அரசு அருங்காட்சியகம், லக்னோ, இந்தியாவில், உத்திரப்பிரதேச மாநிலத்தின் தலைநகரான லக்னோவில் உள்ளது. இந்த அருங்காட்சியகம் முன்னதாக சட்டர் மன்ஜில் மற்றும் லாய் பராடாரி என்னுமிடங்களிலும் அமைந்திருந்தது. இந்த அருங்காட்சியகம் 1963 ஆம் ஆண்டில் லக்னோ மிருகக்காட்சி சாலையில் (பனராசி பேக்) உள்ள புதிய கட்டிடத்திற்கு மாற்றப்பட்டது.[1][2]

அரசு அருங்காட்சியகம், லக்னோ, உத்திரப்பிரதேசம்
யாஷ்விகாரையைச் சேர்ந்த புத்தர், அரசு அருங்காட்சியகம், லக்னோ
Location within இந்தியா
நிறுவப்பட்டது1863
அமைவிடம்லக்னோ, உத்திரப்பிரதேசம்

சிறப்பு

ஆரம்ப காலங்களில் அவத் தொடர்பான கலை மற்றும் சமகால பொருட்களின் தொகுப்புகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. பின்னர், லக்னோவின் அருகிலுள்ள இடங்களிலிருந்தும், குறிப்பாக புத்தர் வளர்ந்த இடங்களிலிருந்தும், நடத்தப்பெற்ற அகழ்வாராய்ச்சியின்போது கண்டுபிடிக்கப்பட்ட பல தொல்பொருட்களைக் கொண்டு விரிவாக்கம் செய்யப்பட்டது. தற்போது, இந்த அருங்காட்சியகத்தில் லக்னோவின் (அவத்) சிற்பம், செம்பு சிலைகள், ஓவியங்கள், இயற்கை வரலாறு போன்ற பல பொருள்களைக் கொண்ட மையமாக மாறியுள்ளது. இந்த அருங்காட்சியகத்தில் ஒரு (கி.மு. 1000) எகிப்திய மம்மி [3] மற்றும் இறந்த உடலை வைக்கக்கூடிய ஒரு மரப்பெட்டியையும் கொண்டுள்ளது. இது ஒரு நான்கு மாடி கட்டிடம் ஆகும்.

வரலாறு

இந்த அருங்காட்சியகம் 1863இல் துவங்கப்பட்டட அருங்காட்சியம் என்ற பெருமையையுடையது. இதில் பலவிதமான காட்சிக்கூடங்கள் காணப்படுகின்றன. அவற்றில் இயற்கை வரலாற்றின் பொருள்கள் தொடங்கி கற்காலப்பொருள்கள் வரையிலான பொருள்களைக் காணமுடியும். நான்கு தளங்களைக் கொண்டு அமைந்துள்ள இந்த அருங்காட்சியகத்தில் உள்ள காட்சிக்கூடங்களில் சமணக் கலைக் காட்சிக்கூடம், இந்திய சிற்பக் கலைக்காட்சிக்கூடம், தொல்லியல் காட்சிக்கூடம், நவாப்புகளின் கலை மற்றும் காசுகள் காட்சிக்கூடம்க்கூடம், எகிப்திய காட்சிக்கூடம், இயற்கை வரலாற்றுக் காட்சிக்கூடம், புத்தர் காட்சிக்கூடம் உள்ளிட்ட பல காட்சிக்கூடங்கள் உள்ளன. பள்ளி செல்கின்ற மாணவர்களுக்காகவும், கல்லூரியில் படிக்கின்ற மாணவர்களுக்காகவும் இந்த அருங்காட்சியகம் பல நிகழ்வுகளைத் தொடர்ந்து நடத்தி வருகின்றது. மேலும் பல திரைப்படங்களையும் வெளியிடுகிறது.[4]

திறந்திருக்கும் நேரம்

இதன் நிர்வாகம் மாநில அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பலவகைக் காட்சிக்கூடங்களைக் கொண்டுள்ள இந்த அருங்காட்சியகம் ஞாயிறு, செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி மற்றும் பொது விடுமுறை நாள்களில் திறந்திருக்கும். இந்த அருங்காட்சியகத்தை காலை 10.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை பார்வையிட வசதி உள்ளது. இங்கு உள்ளே செல்ல அனுமதிக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அனுமதிக்கட்டணம் இந்தியர்களிடமும், வெளிநாட்டினரிடமும் பெறப்படுகிறது. இந்தியாவைச் சேர்ந்த ஐந்து வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும், வெளிநாட்டைச்சேர்ந்தவர்களுக்கும் இக்கட்டணம் பொருந்தும். பள்ளிக்குழந்தைகள் வரும்போது அவர்களிடமிருந்து கட்டணம் எதுவும் வசூலிக்கப்படுவதில்லை.அருங்காட்சியகத்தைச் சுற்றிப் பார்ப்பதற்கு வழிகாட்டிகள் உள்ளனர். அவர்களைப் பயன்படுத்திக்கொள்ளலாம். கேமராவிற்கு தனியாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அருங்காட்சியக இலவசச் சுற்றுலா வசதியும் இங்கு உண்டு. அவ்வசதியானது காலை 11.00 மணி முதல் நடுப்பகல் 12.00 மணி வரையிலும், மதியம் 1.00 மணி முதல் 2.00 மணி வரையிலும், மாலை 3.00 மணி முதல் 4.00 மணி வரையிலும் உள்ளது. தத்தம் வசதிக்கேற்ப பார்வையாளர்கள் இதனைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

செல்லும் வழி

இந்த அருங்காட்சியகம் நர்ஹி என்னுமிடத்தில் அமைந்துள்ளது. அப்பகுதியானது லக்னோவில் ஹஸ்ரத்கன்ஜ் என்னுமிடத்தில் உள்ளது. மிக அருகில் உள்ள பேருந்து நிலையம் காளிதாஸ் மார்க் பேருந்து நிறுத்தமாகும். அருங்காட்சியகம் சார்பாக் புகைவண்டி நிலையத்திலிருந்து 4.2 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. மகிழ்வுந்துகளிலும், சிற்றுந்துகளிலும் கட்டண அடிப்படையில் இங்கு செல்லலாம்.

மேற்கோள்கள்

மேலும் காண்க

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.